இப்ப ஏன் இந்த அடி அடிக்குறாங்க? இத அப்பவே.. ரிஷப் செம்ம ஹேப்பி அண்ணாச்சி!
ப்ளே ஆஃப்க்கு நான்கு அணிகள் தயார்.. மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப்போகிறதென நினைத்தால் அங்குதான் கிரிக்கெட் எனும் மாயாஜாலக்காரன் தனது இரு கைகளையும் விரித்து காண்போரையெல்லாம் தன்வசம் இழுத்துக்கொள்கிறான். பொதுவாக கிரிக்கெட் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும், ஐபிஎல் மாதிரியான ஜனரஞ்சகப் போட்டிகளில் சுவாரஸ்யத்திற்கா பஞ்சம் வந்துவிடப்போகிறது.
இத்தகைய சூழலில் நிதானமே உருவெடுத்த குஜராத் அணியும், அதிரடிக்குப் பெயர்போன லக்னோ அணியும் மோதிக்கொண்டால் என்ன ஆகும்? அகமதாபாத்தில் நடந்த போட்டியில் என்ன நடந்தது.. விரிவாகப் பார்க்கலாம்...
குஜராத் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம்
நடப்பு சீசனில் எலிமினேட் ஆகியுள்ள லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடரை நிம்மதியாகவாவது நிறைவு செய்ய வேண்டுமென்றால் எஞ்சியிருக்கும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மறுபுறம் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலிருக்கும் குஜராத் அணி லீக் சுற்றை முதலிடத்திலேயே நிறைவு செய்ய முயற்சிக்கும். இந்நிலையில்தான் அகமதாபாத்தில் 64ஆவது லீக் போட்டி நடந்தது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிறப்பான பேட்டிங் பிட்சில் பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பந்து வீசப்போவதாக சொல்கிறாரே என அப்போதே பலருக்கும் கேள்வி எழுந்தது.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியின் தொடக்கம் சற்று மெதுவாகத்தான் இருந்தது. லக்னோவின் தொடக்க ஆட்டக்காரர்களான மிட்செல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் ஜோடி விக்கெட்களை கொடுக்காமல் ஆடுகிறார்களே என நினைக்கவைத்தாலும், ஆட்டத்தை தன் கட்டுக்குள்ளேயே வைத்திருந்தது குஜராத் அணி. அதாவது, விக்கெட்கள் விழாவிட்டாலும் ரன்களை வாரிக்கொடுக்காமலிருந்தனர் குஜராத் பந்துவீச்சாளர்கள். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 9.5 ஓவர்களில் 91 ரன்களை சேர்த்திருந்தது. மார்க்ரம் 24 பந்துகளில்க் 2 சிக்ஸர், 3 பவுண்டரி விளாசி 36 ரன்களை எடுத்து சாய் கிஷோரின் திட்டமிட்ட பந்துவீச்சில் வெளியேறினார். பின் வந்த பூரன், மார்ஷ் வைத்திருந்த புள்ளிகளில் கோலமிட ஆரம்பித்தார். ஆனபோதும் ஆட்டம் குஜராத் கைகளிலேயே இருந்தது. ஆனால், அனைத்தும் மாறியது அந்த 12 ஆவது ஓவரில்.....
எங்கு மாறியது ஆட்டம்
ரஷித் கான் வீசிய 12 ஆவது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளைப் பறக்கவிட்டு அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களைச் சேர்த்தார் மிட்செல் மார்ஷ். நீங்கள் நினைத்துப் பாருங்கள்.... டைம் ட்ராவலில் நான்கைந்து வருடங்களுக்கு முன் செல்கிறீர்கள். அப்போதைய கிரிக்கெட் ரசிகர்களிடம், ‘ரஷித் கான் ஓவருக்கு 25 ரன்களைக் கொடுக்கப்போகும் காலம் வரப்போகிறது’ என நீங்கள் சொல்லியிருந்தால் உங்களைப் புத்தி சுவாதீனம் இல்லாதவர் என நினைத்திருக்கவும் வாய்ப்பு உண்டு.. ஆனால், காலம் எத்தனை வேகமாக மாறுகிறது. இந்த தொடர் முழுவதும் ரஷித் கானிற்கு அத்துனை சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் விக்கெட்களையே எடுக்காமல் இருந்துள்ளார். குஜராத் பந்துவீச்சாளர்களில் அதிக சிக்சர்களைக் கொடுத்துள்ள பந்துவீச்சாளராகவும் மாறிப்போனார். ப்ளே ஆஃப் வேறு நெருங்கும் சூழலில் ரஷின் தனது மாயாஜாலத்தை மீண்டும் கண்டுகொண்டால் கோப்பையை குஜராத் பேரில்கூட எழுதிவிடலாம்.
இப்போது ஆட்டத்திற்குப்போவோம். தொடர்ந்து அதிரடி காட்டிய மார்ஷ் 56 பந்துகளில் அபாரமாக சதமடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு பேட்ஸ்மேன் அடித்த முதல் செஞ்சுரி மார்ஷினுடையது. அதிரடியை இறுதி வரைக் கைவிடாத மார்ஷ் 64 பந்ததுகளில் 8 சிக்ஸர், 10 பவுண்டரிகள் என விளாசி 117 ரன்கள் எடுத்து வெளியேறினார். இரண்டாவது விக்கெட்டுக்கு இணைந்த நிக்கோலஸ் பூரனும் மார்ஷும் 121 ரன்களை பார்டன்ர்ஷிப்பாக அமைத்து லக்னோ அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இறுதியில் வந்த ரிஷப் பந்தும் தனது பங்கிற்கு இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 235 ரன்களைக் குவித்தது. பூரன் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளை விளாசி 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து களத்தில் நின்றார். இன்னிங்ஸை முதலில் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த குஜராத் பந்துவீச்சாளர்களால், ஆட்டம் செல்லச் செல்ல ரன்கள் கசிவதைத் தடுக்க முடியவில்லை. குஜராத் அணியின் பந்துவீச்சு முதுகெலும்பான ப்ரஷித் கிருஷ்ணா நடப்புத் தொடரில் போட்டியொன்றில் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்காமல் தனது ஸ்பெல்லை முடித்துள்ளார்.
டெஸ்ட் செய்யப்பட்ட மிடில் ஆர்டர்
200 ரன்கள் என்றால் குஜராத் அணி அசால்ட்டாக சேஸ் செய்துவிடும். 236 என்றால் கொஞ்சம் சந்தேகம்தான் என ஆரம்பத்திலேயே பலருக்கும் தோன்றியிருக்கும். அதிலும் அவர்களது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு வேறு இந்த தொடர் முழுவதும் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், இன்று என்ன நடக்கப்போகிறதோ என்கிற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் எழுந்தது. வழக்கம்போல் நிதானமாகத்தான் சாய் மற்றும் கில் தொடங்கினர். இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே சாய் வெளியேறியிருக்க வேண்டியது. பேடில் பட்டு பேட்டில் பட்ட பந்திற்கு லக்னோ வீரர்கள் அப்பீல் செல்லாததால் எல்பிடபிள்யூ அவுட்டிலிருந்து சாய் தப்பித்தார். ஆனாலும், எப்போதும்போல் இன்றோ நிலைத்து நிற்கவில்லை; 21 ரன்களுக்கு சாய் வெளியேறினார். மறுமுனையில், தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய கில் ஆகாஷ் மகாராஜ் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை அடித்து ரன்ரேட்டை டாப் கியரிலேயே வைத்திருந்தார்.
அவருடன் பட்லரும் இணைந்து அதிரடி காட்ட ரன்கள் வேகமாக ஏறியது. ஆனால், கில் 35 ரன்களுக்கும் பட்லர் 33 ரன்களுக்கும் வெளியேறி குஜராத் ரசிகர்களுக்கு புதிய நிலைமை ஒன்றைப் பழக்கப்படுத்தினர். எப்போதும் குஜராத்தின் மிடில் ஆர்டர் அன் டெஸ்டடாகத்தான் இருக்கும். ஆனால், இன்றோ ஒட்டுமொத்த சுமையும் GT மிடில் ஆர்டர் மேல் இறங்கியது. சற்றும் அலட்டிக்கொள்ளவில்லை யாரும்? குஜராத் அணியின் மிடில் ஆர்டர் குறித்து சமீபத்தில் பேசியிருந்த ஷாருக் கான், நாங்கள் எப்போதும் தயாராகவே இருக்கின்றோமெனத் தெரிவித்திருந்தார். இன்றைக்கு அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்தது.
இலக்கு பெரிதென்றாலும் பதற்றமின்றி ஆடிய ரூதர்போர்ட் மற்றும் ஷாருக் கான் இணைந்து 12 ஆவது ஓவரில் ரெண்டு சிக்ஸர்கள், 14வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர், 15 ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி, 16 ஆவது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என ரன்களை சேர்த்துக் கொண்டே இருந்தனர். 16 ஓவரிலேயே குஜராத் அணி 182 ரன் குவித்து கிட்டதட்ட வெற்றிக்கோட்டுக்கு அருகில் வந்துவிட்டது. எஞ்சியுள்ள 4 ஓவர்களுக்கு 50 சொச்சம் ரன்களே தேவை. மாடர்ன் டே டி20 உலகில் 4 ஓவர்களுக்கு 80 ரன்களே சாத்தியம் எனும் நிலையில் 50 ரன்களை அடிக்க முடியாதா என்ன?
வெற்றி பெற்ற லக்னோ
ஆனால், நாம் நினைத்ததெல்லாம் நடந்துவிடுகிறதா? 17 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே ருதர்போர்டு 38 ரன்களுக்கு வெளியேறினார். அடுத்து வந்த தெவாட்டியாவும் அதே ஓவரில் நடையைக் கட்டினார். இதனிடையே 18 ஆவது ஓவரை வீசிய ஷபாஸ் அகமது மிகச்சிறப்பாகப் பந்துவீசி 7 ரன்களை மட்டுமே கொடுத்து அர்ஷத் கான் விக்கெட்டையும் வீழ்த்தினார். எனவே, களத்தில் நின்றுகொண்டிருந்த ஷாருக் கான் மேல் ஒட்டுமொத்த அழுத்தமும் இறங்கியது. ஆனால், 57 ரன்களுக்கு அவரும் ஆட்டமிழந்தார். கடைசியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 202 ரன் மட்டுமே எடுத்து, லக்னோ அணியிடம் 33 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டார். போட்டி முடிந்து பேசிய குஜராத் கேப்டன் கில், 20 முதல் 30 ரன்களை அதிகமாகக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார்.
குஜராத் அணிக்கு இந்த தோல்வி மிகத்தேவையான ஒன்று. இதுவரை அந்த அணியின் பலமாக இருந்தது டாப் ஆர்டர். அவர்கள் சொதப்பினால் மிடில் ஆர்டர் எப்படி நிலமையை எதிர்கொள்ளும் என்பது தெரியாமலேயே இருந்தது. இன்றைய போட்டியில் அதில் கொஞ்சம் வெளிச்சம் கிடைத்திருக்கிறது. ஆனாலும், பேட்டிங்கிற்கு ஏற்ற களத்தில், சுமாரான பந்துவீச்சு கொண்ட அணிக்கு எதிராக குஜராத் அணி இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். சொல்லப்போனால் லக்னோ அணியின் பீல்டிங்கும் சொதப்பலாகத்தான் இருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸை சந்திக்க இருக்குறது.. அந்தப்போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் முதலிரு இடங்களில் ஏதாவது ஒன்று உறுதி. என்ன நடக்கப்போகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்...