"கொல்கத்தா ரசிகர்கள் மீண்டும் புன்னகைக்க வேண்டும்" - KKR அணியின் ஆலோசகர் கம்பீர்..!

இங்கு மிகவும் சீரியஸான ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன்.
KKR TEAM
KKR TEAMKKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் கிரிக்கெட்டுக்காக பேசப்படவேண்டும் என்றும், வீரர்கள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது என்றும் கூறியிருக்கிறார் அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர். இந்த சீசனில் அவர்கள் மீண்டும் எழுச்சி பெற்று ரசிகர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியைப் பரிசளிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார் அவர்.

gautam gambhir
gautam gambhir KKR

கௌதம் கம்பீர் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன். அவர் தலைமையில் 2012 மற்றும் 2014 ஐபிஎல் தொடர்களை வென்றது கேகேஆர். அதன்பின் டெல்லி அணிக்கு சென்ற அவர், அங்கு ஓய்வு பெற்றார். புதிதாக உருவாக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகராக கடந்த 2 ஆண்டுகள் செயல்பட்ட அவர், இப்போது நைட் ரைடர்ஸுக்கு மீண்டும் ஆலோசகராகத் திரும்பியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டியளித்த அவர், தன் அணியிடமிருந்தும், தன் வீரர்களிடமிருந்தும் என்ன எதிர்பார்க்கிறார் என்பது பற்றிப் பேசினார்.

"நான் முதல் நாளே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திவிட்டேன். என்னைப் பொறுத்தவரை ஐபிஎல் என்பது சீரியஸான விளையாட்டு. இது உங்களைப் பற்றியோ, பாலிவுட் பற்றியோ அல்ல. இது போட்டிகளுக்குப் பின் நடக்கும் பார்டிகள் பற்றியதும் அல்ல. களத்துக்கு சென்று நல்லபடியாக கிரிக்கெட் விளையாடுவது தான் முக்கியம். அதனால் தான் இது உலகின் மிகவும் கடினமான கிரிக்கெட் லீக் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில், இங்கு கிரிக்கெட் தான் பிரதானம். உலகில் எவ்வளவோ கிரிக்கெட் லீக் தொடர்கள் இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட்டுக்கு இணையான சவாலும் புகழும் நிறைந்த ஒரு தொடர் ஐபிஎல் தான். இங்கு நீங்கள் சிறந்த அணியாக விளங்கவேண்டும் என்றால், களத்தில் உங்களால் சிறப்பாக செயல்பட முடிந்திருக்கவேண்டும்" என்று கூறினார் கம்பீர்.

மேலும், "கொல்கத்தா மிகவும் பிரபலமான அணிகளுள் ஒன்றாக இருந்திருக்கிறது. எப்போதுமே அப்படித்தான் இருந்திருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை அது கிரிக்கெட் தாண்டிய பிரபல்யத்தின் காரணமாக என்று நான் நினைத்ததில்லை. கிரிக்கெட் களத்தில் என்ன செய்கிறீர்களோ அதுவே அதிகம் பேசப்படும். அதைத்தான் இப்போதும் நினைக்கிறேன். கொல்கத்தா நைட் ரைடர்ஸ், களத்துக்கு வெளியே நடக்கும் விஷயங்களுக்காக பேசப்படக்கூடாது. அவர்கள் மைதானத்துக்குள் என்ன சாதிக்கிறார்களோ அதற்காக கொண்டாடப்படவேண்டும்" என்றும் கூறினார்.

2014ம் ஆண்டு கம்பீர் தலைமையில் கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதன் பிறகு வெற்றி பெற முடியவில்லை. 2021ல் மட்டும் இறுதிப் போட்டி வரை அந்த அணி முன்னேறியது. ஆனால் மற்ற சீசன்களில் அவர்கள் தொடர்ந்து தடுமாறவே செய்திருக்கிறார்கள். கம்பீர் 2017 சீசனோடு வெளியேறியிருந்தார். தன் கடைசி 2 சீசன்களிலுமே அந்த அணியை பிளே ஆஃப் வரை வழிநடத்தியிருந்தார். 2018ல் புதிய பயணத்தைத் தொடங்கிய நைட் ரைடர்ஸ் அந்த சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அந்த சீசன் மற்றும் 2021 ஃபைனல் தவிர்த்து மற்ற 4 சீசன்களிலும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அதனால் பயிற்சியாளர் குழுவில் பெரும் மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக கம்பீரும் அந்த அணிக்குத் திரும்பியிருக்கிறார். தங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் அந்த பழைய நாள்களைப் பரிசளிக்கவேண்டும் என்று தீர்க்கமாக இருப்பதாகவும் அந்தப் பேட்டியின்போது கூறினார் கம்பீர்.

"இங்கு மிகவும் சீரியஸான ரசிகர்கள் நிறையவே இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் அவர்களிடம் நேர்மையாக இருக்கவேண்டும் என்று கருதுகிறேன். அவர்கள் முகத்தில் மீண்டும் புன்னகை மலரவேண்டும். அதை நாம் உறுதிப்படுத்தவேண்டும். ஏனெனில், உண்மையான ரசிகர்கள் அனைவரும் இங்கு கொல்கத்தாவைச் சேர்ந்தவர்கள் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ஐபிஎல் தொடரின் முதல் மூன்று வருடங்களில் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் புன்னகைக்கவேண்டும்" என்று கூறினார் கம்பீர்.

கொல்கத்தா அணி இந்த ஆண்டு ஏலத்தில் அதிரடியாக மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது. இம்முறை பெரும் மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறது அந்த அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com