ஐபிஎல் 2025 | லக்னோ, டெல்லி அணிகளின் பலம், பலவீனம் என்ன? ஓர் அலசல்!
ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் 4ஆவது லீக் போட்டி இன்று விசாகப்பட்டினத்திலுள்ள ஒய் எஸ் ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
லக்னோ, டெல்லி என இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் களமிறங்குவது மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், இரு அணிகளும் கடந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்குக்கூட வரவில்லை. டெல்லி அணி 6ஆவது இடத்தில் முடித்தது என்றால், லக்னோ அணி 7 ஆவது இடத்தில் தொடரை நிறைவுசெய்தது. கடந்த தொடரில் பெங்களூரு, சென்னை, டெல்லி மற்றும் லக்னோ என 4 அணிகள் 7 வெற்றிகள் பெற்று 14 புள்ளிகளுடன் லீக் சுற்றை முடித்தது. ஆனால், ரன்ரேட் காரணமாக பெங்களூரு அணி (+0.459) ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இத்தகைய சூழலில்தான் டெல்லி மற்றும் லக்னோ என இரு அணிகளும் புதிய கேப்டன்களுடன் களம் காண்கின்றன.
புதிய கேப்டன் ரிஷப் பண்ட் உடன் களம்காணும் LSG!
2016ஆம் ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய ரிஷப் பந்த், 2021ஆம் ஆண்டு முதல் டெல்லி அணியை வழிநடத்தியுள்ளார். டெல்லி அணிக்காக கிட்டத்தட்ட 111 போட்டிகளில் 3284 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 35 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 148.9 ஆகவும் இருக்கிறது. இதில் ஒரு சதம் மற்றும் 18 அரைசதம் அடக்கம்.
ஆனால், கடந்த சில சீசன்களாக ரிஷப் பந்த் கேப்டனுக்குறிய சிறந்த இன்னிங்ஸையோ அல்லது ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும் இன்னிங்ஸையோ விளையாடவில்லை. கடந்த சீசனில்கூட குஜராத் அணிக்கெதிரான ஒரு போட்டியில் மட்டுமே 88 ரன்களை எடுத்தார். பிற போட்டிகளில் சுமாரான ஆட்டம் மட்டும்தான். ஆனால், லக்னோ அணிக்காக ரூ.27 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். முதன்முறையாக டெல்லி அணியை எதிர்த்தும் களம்காண்கிறார்.
லக்னோ அணி எப்படி இருக்கிறது?
லக்னோ அணியைப் பொறுத்தவரை தரமான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ரிஷப் பந்த், டேவிட் மில்லர், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் என எதிரணியை கலங்கடிக்கும் பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். பேட்டிங்கில் முழுக்க முழுக்க வெளிநாட்டு வீரர்களை நம்பியிருந்த லக்னோ அணி, பந்துவீச்சில் ஆவேஷ் கான், மயங்க் யாதவ், ஆகாஷ் தீப் என நம்பிக்கையான வீரர்களைக் கொண்டிருந்தது.
மேற்கண்ட மூன்று பந்து வீச்சாளர்களும் காயத்தில் அவதிப்பட்டு வருகின்றனர். மோஷின் கான் காயம் காரணமாக தொடரிலிருந்தே வெளியேறியுள்ளார். இந்நிலையில்தான் லக்னோ அணியுடன் ‘லார்ட்’ ஷர்துல் தாக்கூர் இணைந்துள்ளார். ஐபிஎல் ஏலத்தின்போது ஏலம்போகாத வீரர்களில் ஒருவராக இருந்த ஷர்துல் தாக்கூர், சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி தொடரில் 505 ரன்களைக் குவித்து 35 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.
டெல்லி அணி எப்படி இருக்கிறது?
டெல்லி அணியை பொறுத்தவரையில் கேஎல் ராகுல் இருந்தும், அணியை அக்சர் பட்டேல் வழிநடத்தவிருக்கிறார். லக்னோ அணியில் இருந்தபோது கேப்டனாக இருந்த கேஎல் ராகுல், இனிமேல் ஒரு வீரராக மட்டுமே களம்புக உள்ளார். இதனால் பழைய கேஎல் ராகுலின் அதிரடியான ஆட்டத்தை நாம் எதிர்ப்பார்க்கலாம். ஏனென்றால் இந்திய அணியிலும் கேஎல் ராகுலின் இடம் கேள்விக்குறியாகவே இருந்துவரும் நிலையில், அவரிடம் இருந்து நல்ல ஒரு ஐபிஎல்லை எதிர்ப்பார்க்கலாம்.
மற்ற வீரர்களை பொறுத்தவரையில் ’ஜேக் ஃபிரேசர், டூபிளெசிஸ், ஸ்டப்ஸ், கருண் நாயர், அபிஷேக் போரல், அஷுதோஷ் சர்மா, சமீர் ரிஸ்வி’ என அதிரடியான இளம் வீரர்கள் மட்டும் அனுபவம் வாய்ந்த பேட்டர்களையும் கொண்டுள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ‘மிட்செல் ஸ்டார்க், டி நடராஜன், முகேஷ் குமார், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சமீரா, மோஹித் சர்மா’ என வலிமையான பந்துவீச்சையும் கொண்டுள்ளது.