IPL 2025 சாம்பியன் யார்? RCBக்கு பெருகிய ஆதரவு.. கருத்துக்கணிப்பில் தகவல்!
இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல், தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இது, அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி, முதல்கட்டமாக பிளேஆப் சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறியது. எனினும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகள் பிளே ஆஃப்க்குச் சென்றுள்ளன. மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையில் 4ஆம் இடத்திற்கான போட்டி நிலவுகிறது. இந்தநிலையில், இந்தாண்டு ஐபிஎல்லில் புதிய சாம்பியன் வரவேண்டும் என பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
23 வாட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய கணிப்பில் 17 முதல் 28 வயது வரையிலான 5 ஆயிரம் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். சென்னை உட்பட 10 நகரங்களில் இக்கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இதில் பெங்களூரு அணி கோப்பை வெல்லவேண்டும் என 65% பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
டெல்லி அணிக்கு 12% பேரும் பஞ்சாப் அணிக்கு 7% பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிஎஸ்கேவுக்காக தோனி தொடர்ந்து விளையாட வேண்டும் என 73% ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். தோனியின் ஆட்டத்தில் தொய்வு இருந்தாலும் அவர் இன்னும் மதிப்பு மிக்க வீரர்தான் என அவர்கள் கூறியுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல்லில் சிறந்த அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷியை பெரும்பாலோனார் தேர்வு செய்துள்ளனர்.