CSK v SRH ”ஹைலைட்ஸ் பார்த்தாலே தூக்கம் வந்துரும்; அப்படியொரு மேட்ச்..” MRC நகர் போரில் என்ன நடந்தது?

தீக்‌ஷானாவின் 6வது ஓவரில், அபிஷேக் ஒரு பவுண்டரி அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில், 45/1 என மெல்ல நடந்துக்கொண்டிருந்தது ஐதராபாத்.
CSK
CSK @IPL, Twitter

வழக்கமாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடுகிற ஆட்டங்களைப் பார்த்தால் ஊக்க மாத்திரை சாப்பிட்டது போல் இருக்கும். ஆனால், நேற்றைய ஆட்டம் தூக்க மாத்திரை சாப்பிட்டது போலிருந்தது. காரணம், சன்ரைசர்ஸ். சேப்பாக்கத்தில் நடந்த எம்.ஆர்.சி. நகர் போரில் அப்படி என்னதான் நடந்தது..

டாஸ் வென்ற தோனி, பவுலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ப்ரூக்கும், அபிஷேக்கும் ஐதராபாத்தின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் ஆகாஷ் சிங். ஒவரின் கடைசிப்பந்தில், ஒரு பவுண்டரியைத் தட்டினார் ப்ரூக். துஷார் வீசிய 2வது ஓவரின் கடைசிப்பந்தில், அபிஷேக் ஒரு பவுண்டரி அடித்தார். ஆகாஷ் சிங்கின் 3வது ஓவரில், ஃபைன் லெக் திசையில் ஒரு சிக்ஸர் அடித்தார் அபிஷேக். துஷாரின் 4வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை தட்டினார் ப்ரூக். 5வது ஓவரை வீசவந்தார் ஆகாஷ் சிங். ப்ரூக் காலி! பேக்வார்டு பாயின்ட்டில் நின்றுகொண்டிருந்த ருதுராஜிடம் கேட்ச் கொடுத்து விட்டு வெளியேறினார். தீக்‌ஷானாவின் 6வது ஓவரில், அபிஷேக் ஒரு பவுண்டரி அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில், 45/1 என மெல்ல நடந்துக்கொண்டிருந்தது ஐதராபாத்.

7வது ஓவரின் முதல் பந்து, சிக்ஸருக்கு பறக்கவிட்டார் த்ரிப்பாதி. மொயின் அலி அரண்டு போனார். 8வது ஓவர் வீசிய ஜடேஜாவையும் பவுண்டரியுடன் வரவேற்றார் அபிஷேக். மொயின் அலியின் 9வது ஓவரில், ஷார்ட் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியைத் பறக்கவிட்டார் த்ரிப்பாதி. ஜடேஜாவின் 10வது ஓவரில், அபிஷேக் சர்மா தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். லாங் ஆனில் கேட்ச் பிடித்தார் ரஹானே. 10 ஓவர் முடிவில், 76/2 என கொட்டாவி விட்டது சன்ரைசர்ஸ் அணி. ஐதராபாத் ரசிகர்கள் எப்போதோ தூங்க தொடங்கிவிட்டார்கள். சென்னை ரசிகர்கள் மட்டும் `தோனி'யைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்கள். 11வது ஓவர் வீசிய பதீரனா, மார்க்ரமுக்கு ஒரு பவுண்டரி கொடுத்தார். ஜடேஜாவின் 12வது ஓவரில், த்ரிப்பாதி அவுட்! ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச். 13வது ஓவரை வீசினார் தீக்ஷானா.

தோனியிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார் மார்க்ரம். நொடிப்பொழுதில் கைகளை நகர்த்தி பிடித்தார். அற்புதமான கேட்ச். ஜடேஜாவின் 14வது ஓவரில், முதல் பந்தை ஜடேஜாவிடமே அடித்தார் மயங்க் அகர்வால். ஜடேஜா அதை பாய்ந்து கேட்ச் பிடிக்கப் போக, குறுக்கே இந்த கௌசிக் வந்தா என பந்து க்ளாஸனின் மேல் பட்டு கீழே விழுந்தது. ஜடேஜா கடுப்பானார். அதே கடுப்புடன் பந்து வீசிய ஜடேஜா, 5வது பந்தில் மயங்க் அகர்வாலின் விக்கெட்டைத் தூக்கினார். ஸ்டெம்பிங் செய்தார் தோனி! தீக்‌ஷானா வீசிய 15வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. 15 ஓவர் முடிவில், 102/5 என ஸ்கோரைப் படிக்கும்போதே கொட்டாவி வந்தது. பதீரனாவின் 16வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. தீக்‌ஷானாவின் 17வது ஓவரில், க்ளாஸன் ஒரு பவுண்டரி அடித்தார். கிட்டதட்ட 6 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பவுண்டரி அடிக்கபட்ட பவுண்டரி. பால் பாய்ஸ் எல்லோரும் வெறுத்துபோய் ஐஸ் பாய்ஸ் விளையாட தொடங்கியிருந்தார்கள்.

பதீரனாவின் 18வது ஓவரில், க்ளாஸனும் அவுட் ஆனார். மீண்டும் ஒரு நல்ல கேட்சைப் பிடித்தார் ருதுராஜ். துஷாரின் 19வது ஓவர்ரில், ஒரு பவுண்டரி அடித்தார் வாஷிங்டன் சுந்தர். பதீரனாவின் கடைசி ஓவரில், யான்சன் ஒரே ஒரு பவுண்டரி அடிக்க, வாஷிங்டன் சுந்தரை தோனி ரன் அவுட் அடிக்க 134/7 என யாருக்கும் பிரச்னையே இல்லாத ஸ்கோரை அடித்திருந்தது சன்ரைசர்ஸ். `கேட்ச், ஸ்டெம்பிங், ரன் அவுட் மூணும் பார்த்தாச்சு. ஒரே ஒரு சிக்ஸ் அடிச்சும் பார்த்துட்டோம்னா ஹேப்பி அண்ணாச்சி' என சென்னை ரசிகர்களின் மனசு சொன்னாலும், `134 ஸ்கோர்லாம் ருதுராஜுக்கே பத்தாதேடா' எனும் உண்மையை அறிவு சொன்னது.

CSK
CSK@ChennaiIPL| Twitter

த்ரிப்பாதிக்கு பதிலாக, மயங்க் தகார் இம்பாக்ட் வீரராக களமிறங்கினார். மயங்க் அகர்வால், மயங்க் மார்க்கண்டே, மயங்க் தகார் என வெறும் மயங்க்குகளாக இருக்கும் காரணத்தினால்தான் நமக்கு மயக்கம் மயக்கமாக வருகிறதோ என சன்ரைசர்ஸ் ரசிகர்கள் ஆராய்ச்சில் இறங்கினார்கள். ருத்துவும் கான்வேயும் சென்னையின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் புவி. முதல் பந்து, பவுண்டரிக்கு தட்டிவிட்டார் ருத்து. யான்சனின் 2வது ஓவரில், கான்வே ஒரு பவுன்டரியும், ருத்து ஒரு பவுண்டரியும் விளாசினர். 3வது ஓவரை வீச தேவாவே வந்துட்டார் என்பதுபோல மார்க்ரமே வந்தார். முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் கான்வே. யான்சனின் 4வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. புவியின் 5வது ஓவரில், 5 ரன்கள். யான்சன் வீசிய 6வது ஓவரில், இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரி, மூன்றாவது பந்தில் ஒரு பவுண்டரி, நான்காவது பந்தில் ஒரு சிக்ஸர், ஐந்தாவது பந்தில் ஒரு பவுண்டரி, கடைசிப்பந்தில் இன்னொரு பவுண்டரி என 23 ரன்களை பறக்கவிட்டார். பவர்ப்ளேயின் முடிவில் 60/0 என அட்டகாசமாய் துவங்கியிருந்தது சென்னை அணி. இன்னும் 84 பந்துகளில் 75 ரன்கள் மட்டுமே தேவை.

7வது ஓவரை வீசிய வாஷி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அடுத்த ஓவரை வீசிய மார்க்கண்டே, 4 ரன்கள் கொடுத்தார். 9வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக்கும், 7 ரன்கள் மட்டுமே. மார்க்கண்டேவின் 10வது ஓவரில் ஒரு பவுண்டரியைத் தட்டி, 33 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார் கான்வே. 10 ஓவர் முடிவில், 86/0 என சென்னை அணியும் உருட்டத் துவங்கியது.

உம்ரானின் வீசிய 11வது ஓவரின் கடைசிப்பந்தில், பந்தை நேருக்கு நேராக அடித்தார் கான்வே. அது உம்ரானின் கையில் பட்டு நான் ஸ்டிரைக் முனை ஸ்டெம்பைத் தாக்கியது. கோட்டுக்கு வெளியே நின்றுக்கொண்டிருந்த ருதுராஜ் கோவமாக பெவிலியனுக்கு கிளம்பினார். மயங்க் தகாரின் 12வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே. வாஷியின் 13வது ஓவரிலும் 4 ரன்களே. தகார் வீசிய 14வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் கான்வே. மார்க்கண்டே அடுத்த ஓவரில் ஒரு ரஹானேவின் விக்கெட்டைக் கழட்டினார். 15 ஓவர் முடிவில், 111/2 என ஊர்ந்துக்கொண்டிருக்க, சென்னை ரசிகர்களும் குளித்துவிட்டு வந்து உறங்கினார்கள். ஹைலைட்ஸ் பார்த்தாலே தூக்கம் வந்துவிடும். அப்படியொரு மேட்ச்.

16வது ஓவரில், தகாரை ஒரு பவுண்டரி அடித்த ராயுடு, 17வது ஓவரில், மார்கண்டேவின் சுழலில் வீழ்ந்தார். உம்ரானின் 18வது ஓவரில், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை அடித்தார் கான்வே. 12 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே தேவை. அதையும் அடுத்த ஓவரின் 4வது பந்தில் அடித்து மேட்சை முடித்தது சென்னை. 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது சன்ரைசர்ஸ் அணி. சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

CSK
சென்னை அணிக்கு அடி மேல் அடி.. ”பென் ஸ்டோக்ஸ் விளையாட மாட்டார்” - ஃபிளெமிங் தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com