செம்ம ஆட்டம்! இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய U19 அணி.. வெற்றிக்கு உதவிய டிரக் ஓட்டுநரின் மகன்!
இங்கிலாந்திற்குச் சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதற்போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. கடந்த 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்து மண்ணில் U19 இந்திய அணி மற்றொரு மகத்தான சாதனை படைத்துள்ளது.
இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் ஆயுஷ் மத்ரே தலைமையிலான U19 அணி, லஃப்பரோவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து யங் லயன்ஸ் அணியை 231 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. 50 ஓவர்கள் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய U19 அணி 444 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் சார்பில் ஹர்வன்ஷ் பங்கலியா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகளும் 9 சிக்ஸர்களும் அடக்கம். அவருக்குத் துணையாக நின்ற ராகுல் குமார் 60 பந்துகளில் 73 ரன்களையும், கனிஷ்க் சவுகான் 67 பந்துகளில் 79 ரன்களையும் எடுத்தனர். அம்ப்ரிஷ் 47 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 445 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சில், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். இதையடுத்து இந்திய அணி 231 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்களையும், நமன் புஷ்பக் மற்றும் விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
குஜராத்தின் கட்ச் ரான் பகுதியில் உள்ள காந்திதாம் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்டரான ஹர்வன்ஷ் பங்கலியா, நகுல் அயாச்சியின் வழிகாட்டுதலின் கீழ் நீலகாந்த் கிரிக்கெட் அகாடமியில் முறையாகப் பயிற்சி பெற்றார். தற்போது ஹர்வன்ஷின் குடும்பம் கனடாவில் குடியேறியுள்ளது. அங்கு அவரது தந்தை பிராம்ப்டனில் ஒரு டிரக் ஓட்டுகிறார். மேலும் டெல்லி பப்ளிக் பள்ளி காந்திதாமில் தற்போது படித்து வரும் ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்) இந்திய U/19 கிரிக்கெட் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீலகாந்த் கிரிக்கெட் அகாடமியில் தனது கிரிக்கெட் பயணத்தை தொழில்முறையாகத் தொடங்கிய ஹர்வன்ஷ், U-14, U-16 நிலைகளில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது U-19 சவுராஷ்டிரா அணிக்கு கேப்டனாகவும் உள்ளார்.