தோல்வி..தோல்வி..தோல்வி! 148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறை.. இந்திய அணியின் மோசமான சாதனை!
இங்கிலாந்திற்குச் சென்றுள்ள ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதன் முதற்போட்டியில் முதல் இன்னிங்ஸில் முறையே இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன. பின்னர் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 364 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 373 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அவ்வணியில் பென் டக்கெட் அதிகபட்சமாக 149 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது. இந்த நிலையில், ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. கடந்த 148 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை தவிர, வேறு எந்த அணியும் ஒரு போட்டியில் 5 சதங்கள் அடித்து தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 12 டெஸ்ட் போட்டிகளில், இந்தியாவின் ஏழாவது தோல்வியாகவும் இது பதிவாகியுள்ளது.
இந்திய அணியின் தோல்வி குறித்து சுனில் கவாஸ்கர், “இந்தியா ஐந்து சதங்கள் அடித்திருந்தாலும், இங்கிலாந்துக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. அதுதான் அவர்களை இறுதி விக்கெட்டுகளை எடுக்க செய்தது. அதனால் இந்தியா ரன்களை எடுக்க நேரிட்டது. கூடுதல் ரன்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பீல்டிங்கை பொறுத்தவரை சாதாரணமாக இருந்தது. டெஸ்ட் தரத்தில் இல்லை. பேட்டிங் செய்ய மிக சிறந்த பிட்ச் என்பதால், பந்துவீச்சாளர்களை விமர்சிப்பது மிகவும் கடினம். பும்ரா மிக நன்றாக பந்துவீசினார். அவருக்கு யாராவது, கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் பந்துவீசியிருந்தால், அது பெரிய உதவியாக இருந்திருக்கும்”என தெரிவித்துள்ளார்.