இளம் பெண் எம்பியை திருமணம் செய்யும் ரிங்கு சிங்.. யார் இந்த பிரியா சரோஜ்?
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், குஜராத் அணி வீரரும் அவருடைய நண்பருமான யாஸ் தயாள் பந்துவீச்சில் 5 சிக்ஸ் அடித்து தனது அணியை வெற்றிபெற வைத்தார். இதன்மூலம், அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதுமுதல் அதிரடி ஆட்டத்தையும் விளையாடிய அவர், விரைவிலேயே இந்திய அணியில் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போதைய நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து வாரணாசியில் நவம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஆனால், நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, ரிங்கு சிங் குடும்பத்தினர் அலிகரின் மஹுவா கெடாவில் உள்ள ரூ.3.5 கோடி மதிப்புள்ள பங்களாவிற்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்த பங்களாவை ரிங்கு சிங் வாங்கியுள்ளார். இங்குதான் ரிங்கு சிங் - பிரியா சரோஜ் திருமணத்திற்குப் பிறகு வசிக்க உள்ளனர்.
யார் இந்த பிரியா சரோஜ்?
உத்தரப்பிரதேசம் மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த பிரியா சரோஜ் (வயது 26), நவம்பர் 23, 1998ஆம் ஆண்டு அரசியல் ஆளுமைமிக்க குடும்பத்தில் பிறந்தவர். சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான இவரது தந்தை துஃபானி சரோஜ், இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, உத்தரப்பிரதேச எம்எல்ஏவாக இருக்கிறார். கடந்த மக்களவைத் தேர்தலில், ஜான்பூரின் மச்லிஷஹர் தொகுதியில் சமாஜவாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா சரோஜ், பாஜகவின் மூத்த தலைவர் போலாநாத் சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இளம் எம்பியாக உருவெடுத்தார். டெல்லி பல்கலையில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவின் அமிட்டி பல்கலையில் எல்.எல்.பி. பட்டமும் பெற்றவர். அரசியலில் நுழைவதற்கு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பயிற்சி பெற்றார்.