IND V ENG T20 | தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முன்னதாக, மூன்று டி20 போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதன் முடிவில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகித்தது. இந்த நிலையில் மான்செஸ்டர் ஓல்ட் ட்ராபோர்ட் மைதானத்தில், நேற்று நான்காவது போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் மற்றும் ஸ்ரீசாரணி ஆகியோ தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பின்னர், 127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில், ஸ்மிருதி மந்தனா (32), ஷபாலி வர்மா (31) ஆகியோர் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பின்னர் வந்த கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் (26), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (24) ஆகியோர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். இறுதியில் இந்திய அணி 17 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது. இன்னும், இவ்விரு அணிகளுக்கு ஒரு டி20 போட்டி எஞ்சியுள்ளது.