FIDE மகளிர் உலகக்கோப்பை செஸ் | இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நாக்பூர் ராணி! யார் இந்த திவ்யா தேஷ்முக்?
ஜார்ஜியாவில் FIDE மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனையான திவ்யா தேஷ்முக்கும் இறுத்ப்போட்டிக்குத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார். அவர், காலிறுதியில் சகநாட்டவரான ஜிஎம் ஹரிகா துரோணவள்ளியை தோற்கடித்து, இரண்டு டை-பிரேக் ஆட்டங்களிலும் வெற்றிபெற்ற தேஷ்முக், தனது முதல் அரையிறுதி ஆட்டத்தை சீனாவின் டான் ஜோங்கிக்கு எதிராக 0.5-0.5 என்ற கணக்கில் டிரா செய்தார். இதையடுத்து, அவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
யார் இந்த திவ்யா தேஷ்முக்?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த திவ்யா தேஷ்முக், மருத்துவர் பெற்றோர்களான ஜிதேந்திரா மற்றும் நம்ரதா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர். அவரது மூத்த சகோதரி பூப்பந்து விளையாட்டில் ஆடத் தொடங்கியதால் இவருக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் வந்துள்ளது. ஆனால், அவர் தனது விளையாட்டின் மீதான காதலை சதுரங்கத்தில் செலுத்தத் தொடங்கினார். அதற்காக, சென்னையைச் சேர்ந்த ஜி.எம்.ஆர்.பி.ரமேஷிடம் அவர் பயிற்சி பெற்றார்.
5 வயதில் ஆரம்பித்த அவருடைய சதுரங்கப் பயணம், தொடர்ந்து அவரை முன்னேற வைத்தது. 2012ஆம் ஆண்டு 7 வயதுக்குட்பட்டோர் தேசிய சாம்பியன்ஷிப்பை அவர் வென்றதன் மூலம் தனது முதல் பட்டத்தை வீட்டிற்குக் கொண்டு வந்தார். அதைத் தொடர்ந்து U‑10 (டர்பன், 2014) மற்றும் U‑12 (பிரேசில், 2017) பிரிவுகளில் உலக இளைஞர் பட்டங்களை வென்றார். திவ்யா தேஷ்முக் தனது பெண் FIDE மாஸ்டர் பட்டத்தை விரைவாகவே பெற்றார். 2021ஆம் ஆண்டு அவர் பெண் கிராண்ட்மாஸ்டர் (WGM) பட்டத்தைப் பெற்றார்.
மேலும் அந்த மதிப்பீட்டின்கீழ் விதர்பாவின் முதல் மற்றும் இந்தியாவின் 22வது இடத்தைப் பிடித்தார். 2023ஆம் ஆண்டு, திவ்யா தேஷ்முக் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டத்தைப் பெற்றார். அடுத்து 2024 ஆம் ஆண்டு உலக ஜூனியர் பெண்கள் U‑20 சாம்பியன்ஷிப்பை உலகின் நம்பர் 1 ஆக வென்றார். புடாபெஸ்டில் நடந்த 45வது செஸ் ஒலிம்பியாட் (2024) போட்டியில் இந்தியா அணி தங்கப் பதக்கம் வென்றதில் திவ்யா முக்கிய பங்கு வகித்தார். இதுவரை, தேஷ்முக் தனது மூன்று செஸ் ஒலிம்பியாட் தங்கப் பதக்கங்களையும், பல ஆசிய மற்றும் உலக இளைஞர் பட்டங்களையும் பெற்றுள்ளார்.