செஸ் உலகக்கோப்பை | தொடர்ந்து அசத்தும் திவ்யா தேஷ்முக்... இன்று இரண்டாவது அரையிறுதி..!
பெண்களுக்கான செஸ் உலகக்கோப்பை சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியிருக்கிறது. அரையிறுத்திக்கான முதல் சுற்று இரண்டு போர்டுகளிலும் டிராவில் முடிவடைந்திருக்கும் சூழலில், இன்று இரண்டாவது சுற்று நடக்கவிருக்கிறது.
ஓப்பன் பிரிவினர்களுக்கான செஸ் உலகக்கோப்பை அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள சூழலில், பெண்களுக்கான செஸ் உலகக்கோப்பை தற்போது பட்டூமியில் நடைபெற்றுவருகிறது. இந்த செஸ் உலகக்கோப்பை இந்தியா வெர்சஸ் சீனா என சொல்லும் அளவுக்கு அரையிறுதி போட்டி இரண்டு இந்தியர்களுக்கும், இரண்டு சீனா வீரர்களுக்கும் இடையே நடக்கிறது. முதல் போர்டில் இந்தியாவின் கொனிரூ ஹம்பியும், சீனாவின் லீ டிங்ஜியும் மோதினார்கள். இரண்டாவது போர்டில் இந்தியாவின் திவ்யா தேஷ்முக்கும், சீனாவின் டேன் ஜொங்கியும் மோதினார்கள்.
இந்தத் தொடரில் 19 வயதான திவ்யா தேஷ்முக் தொடர்ந்து அசத்தி வருகிறார். அரையிறுதியில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே உலக சாம்பியன் பட்டம் வென்ற டேன் ஜொங்கியை அவர் எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இதற்கு முன்பு மூன்று முறை இருவரும் விளையாடியிருக்கிறார்கள். அதில் இரண்டு முறை டேன் தான் வென்றிருக்கிறார். ஒரு முறை போட்டி டிராவில் முடிவடைந்திருக்கிறது. இந்தத் தொடரில் 15வது சீடாக களம் இறங்கிய திவ்யா தொடர்ந்து வென்றுவருகிறார். நாக் அவுட் தொடரில் தொடர்ச்சியாக சீனியர் வீரர்களுடன் போட்டி போட்டு விளையாடி வெல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நான்காவது சுற்றில் சீனாவின் ஜூ ஜினரை வீழ்த்தியவர், ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் சக வீரரும் கிராண்ட் மாஸ்டருமான ஹரிகா த்ரோனாவள்ளியை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் திவ்யா . இன்னும் அவர் கிராண்ட் மாஸ்டர்கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
" திவ்யாவின் எண்டு கேம் திறனும், டெஃபென்ஸ் ஆட்டமும் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ந்திருக்கிறது. ஹரிக்காவுக்கு ஐந்து நிமிடங்கள் இருந்தது. அதே சமயம், திவ்யா நொடிகளில் தான் நேரத்தை வைத்திருந்தார். ஆனாலும், திவ்யா அந்த அழுத்தமான சூழலிலும் வெற்றியை சூடினார். " என்கிறார் கிராண்ட் மாஸ்டர் ஷியாம் சுந்தர்.
நேற்று நடந்த அரையிறுதிக்கான முதல் சுற்றில், பிளாக் பீஸ்களுடன் திவ்யா ஆடினார். பிஷப், நைட், ரூக் பான் எண்டிங் நோக்கி நகர்ந்த போட்டி 30 மூவ் வரை நீடித்தது. பிறகு இருவரும் டிராவிற்கு ஒப்புக்கொண்டனர். மற்றுமொரு அரையிறுதி ஆட்டத்தில் ஹம்பி லீ டிங்ஜியை டிரா செய்தார்.
இன்று நடக்கும் இரண்டாவது போட்டியில் ஹம்பியும், திவ்யாவும், ஒயிட் பீஸ்களுடன் களம் இறங்குவார்கள். இன்று இருவருமே ஒயிட்டில் ஆட இருப்பதால், இருவருக்கும் சிறு அட்வாண்டேஜ் இருக்கும் என நம்புகிறார் கிராண்ட் மாஸ்டரான சூசன் போல்கர்.