”நான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை; அவர்கள்..” - உண்மையை உடைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இங்கிலாந்து அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக விளங்கியவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் லார்ட்ஸில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டுக்குப் பிறகு ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். இந்த நிலையில், ”நான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை” என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் முழு விருப்பத்துடன் ஓய்வுபெறவில்லை. நான் இன்னும் எப்போதும்போல் நன்றாக பந்துவீசினேன். என் உடல் நல்ல நிலையில் இருந்தது. ஆஷஸ் தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா விளையாட்டுகளுக்கும் இளைஞர்கள் களத்தில் இறங்க வேண்டும். ஆனால் அதை வயது மற்றும் அனுபவத்துடன் சமநிலைப்படுத்த வேண்டும். அது கடினம். நான் அணியில் இடம்பெறும் அளவுக்கு நல்லவனாகவும், போதுமான உடல் தகுதியுடையவனாகவும் இருக்கும் வரை அவர்கள் என்னைத் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருப்பார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. ஆனால், பின்னர் அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டனர். அவர்களின் கருத்தை நான் புரிந்துகொண்டேன். என் மனைவி கோபமாக இருந்தாலும், நான் கோபப்படவில்லை; ஒருவேளை இன்னும் கோபமாக இருக்கலாம். ஆனால் அவள் எப்போதும் என் மிகப்பெரிய ஆதரவாளராகவும், என் வாழ்க்கை முழுவதும் எனக்கு மிகப்பெரிய உதவியாகவும் இருந்திருக்கிறாள்.
188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.