WPL 2024 | குஜராத் ஜெயின்ட்ஸ் - இந்த அணிக்கு விடிவு காலமே இல்லையா?!

2023 சீசன் தொடக்கமே அந்த அணிக்கு மோசமாகத்தான் இருந்தது. களத்தில் அல்ல... அவர்களின் தவறுகள் ஏலத்திலேயே தொடங்கின.
gujarat giants
gujarat giantsgujarat giants

வுமன்ஸ் பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது சீசனில் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்திருக்கிறது. உபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருக்கிறது ஜெயின்ட்ஸ். ஆனால், இது அந்த அணிக்கு இந்த சீசன் நடக்கும் பிரச்சனை இல்லை. கடந்த இரண்டு சீசன்களாகவே இது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதுவரை விளையாடிய 11 WPL போட்டிகளில் ஒன்பதில் தோற்றிருக்கிறது அந்த அணி.

gujarat giants
மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!

எந்த ஒரு அணிக்குமே ஓரிரு சீசன்கள் மோசமாக அமையும். ஆனால் ஒரு மோசமான சீசன் முடிந்தவுடனேயே அதை சரிசெய்ய முயற்சிப்பார்கள். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் என அனைத்து அணிகளிடமுமே அதைப் பார்த்திருக்கிறோம். அடுத்த சீசனும் மோசமாகத் தான் இருக்கும். ஆனால் ஓரளவுக்கேனும் தவறுகளை சரிசெய்திருப்பார்கள். இல்லை, சரிசெய்ய முயற்சித்திருப்பார்கள். ஆனால் குஜராத் ஜெயின்ட்ஸ் அப்படி இல்லை. செய்த தவறுகள் எதையும் சரிசெய்ய முயற்சிக்காமல், அதையே மறுபடியும் மறுபடியும் செய்திருக்கிறது குஜராத் ஜெயின்ட்ஸ். நல்ல விஷயங்களை விட அந்த அணியை சுற்றி சர்ச்சைகளும் விமர்சனங்களுமே அதிகமாக சூழ்ந்திருக்கிறது.

2023 சீசன் தொடக்கமே அந்த அணிக்கு மோசமாகத்தான் இருந்தது. களத்தில் அல்ல... அவர்களின் தவறுகள் ஏலத்திலேயே தொடங்கின. ஐபிஎல் தொடர் ஒரு விஷயத்தை கற்றுக்கொடுத்தது என்றால், அது தரமான இந்திய வீரர்கள் இருக்கும் அணிகளே வெற்றிகளைக் குவிக்கும் என்பது தான். குஜராத் ஜெயின்ட்ஸ் தங்கள் முதல் சீசனில் முற்றிலும் மாறுபட்ட பாதையை தேர்வு செய்தது. 3.2 கோடி ரூபாய் கொட்டி ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்லி கார்ட்னரை வாங்கியது அந்த அணி. 2 கோடிக்கு பெத் மூனியையும் வாங்கியது. சோஃபியா டங்க்லி, டியாண்ட்ரே டாட்டின், ஆனபெல் சதர்லேண்ட் என வெளிநாட்டு வீராங்கனைளுக்கே பெரும்பாலும் செலவு செய்தது அந்த அணி. முன்னணி இந்திய வீராங்கனைகள் யாருக்குமே அவர்கள் செலவு செய்யவில்லை. ஹர்லீன் தியோல், ஸ்னே ராணா போன்றவர்களையே அவர்களால் வாங்க முடிந்தது. இதற்கெல்லாம் விளைவு முதல் சீசனில் தெரிந்தது.

கேப்டன் பெத் மூனி முதல் போட்டியிலேயே காயமடைந்து வெளியேற, அது அவர்களுக்கு இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றது அந்த அணி. கடைசி இடமும் பிடித்தது. அந்த அணியின் தோல்விகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தொடர்ந்து படுமோசமாக ஆடியதால் இந்த சீசனுக்கு முன் 10 வீராங்கனைகளை ரிலீஸ் செய்தது ஜெயின்ட்ஸ். சரி இம்முறையாவது ஏலத்தில் சரியாக செயல்பட்டதா என்றால் அதுவும் இல்லை. ஆனபெல் சதர்லேண்ட் போன்ற ஒரு உலகத்தர ஆல்ரவுண்டரை ரிலீஸ் செய்தார்கள். கஷ்வி கௌதம் போன்ற அனுபவம் இல்லாத இளம் வீராங்கனைக்கு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் செலவு செய்தார்கள். அவர் காயத்தால் இந்த சீசனிலிருந்து விலக, அது பெரிய பின்னடைவாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல், ஏற்கெனவே இரு வெளிநாட்டு டாப் ஆர்டர் பேட்டர்கள் இருக்கையில் ஃபீபி லிட்ச்ஃபீல்டையும் வாங்கினார்கள்.

இப்போது இந்த சீசனில் 3 போட்டிகளில் 3 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதோடு ஒட்டுமொத்தமாக 11 போட்டிகளில் 7 ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்கள். அதில் சிறப்பு என்னவென்றால், இந்த சீசனில் பயன்படுத்திய 3 தொடக்க ஜோடிகளில் ஒன்றில் கூட ஆஸ்திரேலியாவின் ஓப்பனர் ஃபீபி லிட்ச்ஃபீல்ட் ஆடவில்லை. முதல் போட்டியில் வேதா கிருஷ்ணமூர்த்தியை களமிறக்கி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள். இரண்டாவது போட்டியில் பெத் மூனியோடு களமிறங்கினார் ஹர்லீன் தியோல். மூன்றாவது ஆட்டத்தில் லாரா வோல்வார்ட் களமிறங்கினார். இப்படி எதற்கென்றே புரியாமல் புதிரான முடிவுகளை எடுத்துக்கொண்டிருக்கிறது அந்த அணி. இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சொதப்பல் என்பது ஒரு உதாரணம் தான். அணி முழுக்க இது மட்டுமே நடந்துகொண்டிருக்கிறது.

இந்த சீசன் தொடங்குவதற்கு முன் பயிற்சியாளர் ரேச்சல் ஹெய்ன்ஸை மாற்றி மைக்கேல் கிளங்கரை கொண்டுவந்தார்கள். ஆனால் அது ஏலத்துக்கு பின்னர் நடந்தது. ரெயில்வேஸ் அணியில் ஆடிய பயிற்சியாளர் குழு அந்த அணியில் ஆடிய வீராங்கனைகளை ஜெயின்ட்ஸ் அணிக்கு தேர்வு செய்தது அவர்களின் பிரச்சனை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதையெல்லாம் அடுத்த சீசனாவது அந்த அணி செய்யுமா என்று தெரியவில்லை. போன சீசன் தொடங்குவதற்கு முன்பே டாட்டின் ஃபிட் இல்லை என்று அவரை மாற்றி பெரிய சர்ச்சையைக் கிளப்பியது ஜெயின்ட்ஸ். இப்போது தொடர்ந்து தோல்விகளாலும் தங்கள் முடிவுகளாலும் பெரும் விமர்சனங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது அந்த அணி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com