மஹி-க்கு இதுதான் கடைசி ஐபிஎல்லா? Definitely Not! எதிர்ப்பார்க்காத பதிலை சொன்ன தோனியின் பால்ய நண்பர்!
கடந்த 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக மழை வெயில் என 3 நாட்களை தாண்டி கடைசிப்பந்தில் த்ரில் வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 5வது ஐபிஎல் கோப்பையை வென்று அதிக கோப்பைகள் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியை சமன்செய்தாச்சு, முழங்காலிலும் பெரிய காயம் பார்த்தாச்சு, இதுதான் ஓய்வுபெறுவதற்கான தருணம் என தோனி முடிவெடுத்துதான் இறுதிப்போட்டியில் விளையாடினார்.
ஒருவேளை இதுதான் தோனிக்கு கடைசி போட்டியாக இருக்குமோ என்ற பயத்தால், கண்ணில் கண்ணீரோடு தோனியை பார்க்க இறுதிப்போட்டிக்கு சென்ற சென்னை ரசிகர்கள், போட்டி முடிவதற்கு 3 நாட்கள் ஆனபோதும் மழை வெயில் என எதையும் பார்க்காமல் கொசுக்கடியில் ரயில்வே ஸ்டேசனில் படுத்தெழுந்து வந்து தோனியின் வெற்றியை தங்களுடைய வெற்றியைபோல் பறைசாற்றினர்.
இதையெல்லாம் கவனித்த மகேந்திர சிங் தோனி, ”இதைவிட ஓய்வை அறிவிக்கை சிறந்த தருணம் இருக்கமுடியாது. ஆனால் இவ்வளவு அன்புகாட்டும் சென்னை ரசிகர்களுக்காக கூடுதலாக ஒரு ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறேன்” என்று அறிவித்தார். இதை சற்றும் எதிர்பாராத தோனி மற்றும் சென்னை ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் சென்னை திரும்பினர்.
இந்நிலையில் நடக்கவிருக்கும் 2024 ஐபிஎல் தொடர்தான் தோனிக்கு கடைசி ஐபிஎல்லாக இருக்குமா? என்ற கேள்விக்கு, இல்லை இன்னும் ஒரு வருடம் தோனி நிச்சயம் சென்னை அணியில் விளையாடுவார் என தோனியின் சிறுவயது நண்பர் பரம்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த சீசனோடு தோனி ஓய்வு பெற வாய்ப்பில்லை!
ஒன்கிரிக்கெட் உடன் பேசியிருக்கும் தோனியின் சிறுவயது நண்பர் பரம்ஜித் சிங், “வரவிருக்கும் 2024 ஐபிஎல் சீசனுக்குப் பிறகு தோனி ஓய்வுபெற வாய்ப்பில்லை. இன்னும் ஒன்று அல்லது இரண்டு சீசன்களில் விளையாடும் அளவுக்கு அவர் உடற்தகுதியுடன் இருக்கிறார். தோனி நிச்சயம் 2025 ஐபிஎல் தொடரில் விளையாடுவார். அதற்கு காரணம் அவருடைய சிறந்த உடற்தகுதி” என்று கூறியுள்ளார்.
யாருக்கு தெரியும் தோனி அவருடைய ரசிகர்களுக்காக் மீண்டும் ஒரு ஐபிஎல் தொடரில் கூட விளையாடலாம். சமீபத்தில் தன்னுடைய சென்னை ரசிகர்கள் குறித்து தோனி பேசியிருந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது தோனி எந்தளவு பிணைப்போடு இருக்கிறார் என்பதை வெளிப்படுத்தியது.
அந்த வீடியோவில் ரசிகர்கள் குறித்து பேசியிருக்கும் தோனி, “எங்கள் அணிக்கு கிடைத்த நல்ல ரசிகர்களை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். சென்னை அணியின் ரசிகர்களும், சிறந்த நிர்வாகமும்தான் பல ஆண்டுகளாக சென்னை அணியின் வெற்றிக்கு காரணம்” என்று தோனி கூறியுள்ளார். 2024 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ரீ கேம்ப் இன்று தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.