GTvDC | என்ன டெல்லி பசங்க குஜராத்தையே அடிச்சுட்டாங்க..!

இன்னும் 6 பந்துகளில் 12 ரன்கள் தேவை. ஒரு பக்கம், `பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ்' என திவாட்டியா வியாபாரம் பார்க்க, `தம்டீ, கும்டீ, தம்டீ' என இஷாந்த் சர்மா சைக்கிளைத் தள்ளிக் கொண்டுவந்தார். கடைசி ஓவர் களேபரமானது.
Mohammed Shami
Mohammed ShamiPTI

மாணிக் பாட்ஷாவாலேயே அடிக்க முடியாத மார்க் ஆண்டனியை, மாணிக்கத்தோடு ஆட்டோ ஓட்டும் ஜனகராஜ் அடித்து துவைத்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான் இருந்தது நேற்றைய ஐ.பி.எல் மேட்ச். புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸும், கடைசி இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் நேற்று பலபரீட்சை நடத்தினார்கள். பரீட்சையில் கேள்வியையே பதிலாக எழுதி வைக்கும் டெல்லி அணி பேட்டிங்கை தேர்ந்தெடுக்க, அடிஷனல் ஷீட் வாங்கும் டைட்டன்ஸ் அணி ஃபீல்டிங் செய்தது.

Rashid Khan
Rashid Khan PTI

`எங்க டீம்ல உப்பு இருக்கு' என சால்ட்டுடன் களமிறங்கினார் கேப்டன் வார்னர். முதல் ஓவரை முகமது ஷமி வீசினார். ஹாஃப் வாலியாக வீசபட்ட முதல் பந்தை, எக்ஸ்ட்ரா கவரில் அடிக்கிறேன் என மில்லரிடம் கேட்ச் கொடுத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் சால்ட். 2வது ஒவரை வீசினார் கேப்டன் ஹர்திக். ஷார்ட் மிட் விக்கெட் திசையில் ப்ரியம் கர்க் தட்டிவிட்ட இரண்டாவது பந்தில், ரன் ஓடுகிறேன் என அவுட் ஆனார் கேப்டன் வார்னர். ரஷீத் கான் பந்தை பிடித்து எறியவில்லை. மாறாக ஒடிவந்தே ரன் அவுட் அடித்தார்! அடுத்து களமிறங்கிய ரூஸோ, அதே ஓவரில் 2 பவுண்டரிகள் அடிக்க, டெல்லி அணி கொஞ்சம் ஆசுவாசமானது.

ஷமியின் 3வது ஓவரில் ரூஸோவும் அவுட். கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். ஜோஸ் லிட்டில் வீசிய 4வது ஓவரில் பவுண்டரிகள் ஏதுமின்றி 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. மீண்டும் அடுத்த ஓவரை வீசவந்தார் ஷமி. முதல் பந்திலேயே மணீஷ் பாண்டே அவுட். சூப்பர்மேன் கேட்ச் ஒன்றைப் பிடித்தார் சாஹா! அதே ஓவரின் கடைசிப்பந்தில், கர்க்கும் காலி. மீண்டும் சாஹாவே கேட்ச் பிடித்தார். 6வது ஓவரில் அமான் கானுக்கு ஒரு பவுண்டரியுடன் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் லிட்டில். பவர்ப்ளேயின் முடிவில் 28/5 என மோசமாக துவங்கியிருந்தது டெல்லி. தங்களது சாதனையை டெல்லி முறியடிக்க வேன்டுமென வேண்டினார்கள் ஆர்.சி.பி. ரசிகர்கள்.

Gujarat Titans
Gujarat Titans-

ஷமியின் 7வது ஓவரில், அக்ஸர் படேல் ஒரு பவுண்டரி தட்டினார். 4-0-11-4 என விரைவாகவும் விமரிசையாகவும் தனது ஸ்பெல்லை முடித்தார் ஷமி. புலியிடம் இருந்து தப்பித்து மரத்தின் மேல் ஏறினால், அங்கே ரஷீத் கான் எனும் பாம்பு! ரஷீத் கானின் 8வது ஓவரில் பொளேரென ஒரு சிக்ஸரை வெளுத்தார் அமான் ஹகீம் கான். நூர் அகமது வீசிய 9வது ஓவரில், 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ரஷீத் கானின் 10வது ஓவரில் சிக்ஸர் அடித்தார் அக்ஸர். கடினமான கேட்ச் மில்லரின் கையிலிருந்து நழுவியது. 10 ஓவர் முடிவில் 54/5 என உருண்டு கொண்டிருந்தது டெல்லி.

நூர் அகமதின் 11வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. ரஷீத்தின் 12வது ஓவரில் 3 ரன்கள். நூர் அகமது வீசிய 13வது ஓவரில் அக்ஸர் ஒரு பவுண்டரி அடித்தார். 14வது ஓவரில் மோகித் சர்மாவை அழைத்து வந்தார் ஹர்திக். ஓவரின் கடைசிப்பந்தில் அக்ஸர் படேல் அவுட். ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அடுத்து ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ரிபல் படேல். மோகித் சர்மாவின் 16வது ஓவரில், ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என முக்கியமான ரன்களை சேகரித்தார் அமான் கான். `கமான் கான்' என டெல்லி ரசிகர்கள் வெறியானார்கள்.

Axar Patel
Axar Patel-

லிட்டிலின் 17வது ஓவரை, ரிபல் இரண்டு பவுண்டரிகளும், அமான் ஒரு பவுண்டரியும் அடித்து பெரிய ஓவராக மாற்றினார்கள். மீண்டும் வந்தார் மோகித். ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்ட அமான் கான், அடுத்த பந்தில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். ரஷீத் வீசிய 19வது ஓவரின் முதல் பந்திலேயே ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரிபல் படேல். 3வது பந்தில், அமான் கான் விக்கெட் கழண்டது. அபினவ் மனோகரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு அமைதியாக கிளம்பினார். மோகித் வீசிய கடைசி ஓவரில் ரிபல் படேலும் அவுட். மொத்தத்தில், 130/8 என ஸ்கோர்போர்டில் சுமாரான ஸ்கோரை போட்டிருந்தது டெல்லி கேபிடல்ஸ்.

மோகித்துக்கு பதிலாக கில்லும், ப்ரியம் கர்க்குக்கு பதிலாக கலீல் அகமதும் இம்பாக்ட் வீரர்களாக களமிறங்கினார்கள். சாஹா - கில் ஜோடி குஜராத்தின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசினார் கலீல் அகமது. கேட்ச்களை பாய்ந்து பாய்ந்து பிடித்த சாஹா, முதல் ஓவரை பயந்து பயந்து ஆடினார். கடைசியாக, ஓவரின் கடைசிப்பந்தில் கீப்பர் சால்ட்டிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கோவமாக கிளம்பினார். முதல் ஓவரே விக்கெட் மெய்டன்! இஷாந்த் சர்மாவின் 2வது ஓவரில், கில் ஒரு பவுண்டரி தட்டினார். கலீலின் 2வது ஓவரை கட்டம் கட்டிய ஹர்திக், ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை பறக்கவிட்டார். நோர்க்யாவை அழைத்து வந்தார் வார்னர். கில்லை விக்கெட்டை எடுத்துக்கொடுத்தார் நோர்க்யா. முதல் இன்னிங்ஸில் சால்ட் அவுட்டானது போலவே, எக்ஸ்ட்ரா கவரில் அடிக்க முயன்று ஃபீல்டரிடம் கேட்ச் ஆனார் கில்.

David Miller
David MillerPTI

இஷாந்தின் 5வது ஓவரில், விஜய் சங்கர் ஒரு பவுண்டரி தட்டினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தில், அட்டகாசமான ஒரு நக்கல் பந்தை வீசி விஜய் சங்கரை விரட்டிவிட்டார் இஷாந்த். `நான் பார்த்ததிலேயே இஷாந்த் வீசிய இந்த பந்தைதான் சிறந்த நக்கல் பந்து என்பேன்' என ட்வீட்டினார் ஸ்டெய்ன். நோர்க்யாவின் 6வது ஓவரில், ஹர்திக் ஒரு பவுண்டரி அடித்தார். பவர்ப்ளேயின் முடிவில் 31/3 என டைட்டன்ஸை டைட்டாக பிடித்தது கேபிடல்ஸ்.

7வது ஓவரை வீசவந்தார் குல்தீப் யாதவ். ஓவரின் 4வது பந்தை ஸ்கூப் ஷாட் ஆடுகிறேன் என போல்டானார் மில்லர். கில்லர் மில்லருக்கு வாத்து முட்டை ஒன்றை கூடையில் போட்டு கொடுத்தனுப்பினார் குல்தீப். அக்ஸரின் 8வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே கிடைத்தது. ஆட்டத்தின் போக்கைப் பார்த்து எல்லோருடைய கண்களும் கலங்கியிருந்தது, கொட்டாவி விட்டதில் . குல்தீப்பின் 9வது ஓவரில் 4 ரன்கள். அக்ஸரின் 10வது ஓவரில் ஒரு சிக்ஸர் அடித்தார் அபினவ் மனோகர். 10 ஓவர் முடிவில் 49/4 என மிக பரிதாபமான நிலையிலிருந்தது டைட்டன்ஸ்.

Ishant Sharma
Ishant Sharma-

இஷாந்த் சர்மா வீசிய 11வது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே. குல்தீப்பின் 12வது ஓவரில் 4 ரன்கள். அக்ஸரின் 13வது ஓவரிலும் 4 ரன்கள். கலீல் வீசிய 14வது ஓவரில், ஹர்திக் ஒரு பவுண்டரி அடித்தும் 8 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அக்ஸரின் 15வது ஓவரில் 8 ரன்கள். இன்னும் 30 பந்துகளில் 52 ரன்கள் தேவை. நோர்க்யாவின் 16வது ஓவரில் ஹர்திக் ஒரு பவுண்டரி தட்டினார். குல்தீப்பின் 17வது ஓவரில், தனது அரைசதத்தையும் கடந்தார் கேப்டன் ஹர்திக். கலீல் வீசிய 18வது ஓவரின் முதல் பந்து, அபினவ் மனோகர் அவுட்.

Mohammed Shami
LSGvRCB | ரைவ்லரி வாரம்... எத்தனை அடிதடி... பஞ்சாயத்தாடா இதெல்லாம்!

`வந்துட்டான்டா என் தலைவன் ஐஸ் மேன்' என திவாட்டியாவை நினைத்து அலறினார்கள் டைட்டன்ஸ் ரசிகர்கள். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது. 12 பந்துகளில் 33 ரன்கள் தேவை. நோர்க்யா வீசிய 19வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில், டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு குச்சி ஐஸ், மிட் விக்கெட் திசையில் ஒரு கோன் ஐஸ், லாங் ஆன் திசையில் ஒரு கப் ஐஸ் என ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தார் ஐஸ் மேன். டைட்டன்ஸ் ரசிகர்களின் உள்ளம் குளிர்ந்தது.

இன்னும் 6 பந்துகளில் 12 ரன்கள் தேவை. ஒரு பக்கம், `பால் ஐஸ், கப் ஐஸ், கோன் ஐஸ்' என திவாட்டியா வியாபாரம் பார்க்க, `தம்டீ, கும்டீ, தம்டீ' என இஷாந்த் சர்மா சைக்கிளைத் தள்ளிக் கொண்டுவந்தார். கடைசி ஓவர் களேபரமானது. முதல் பந்தில், ஹர்திக் இரண்டு ரன்கள் ஓடினார். 2வது பந்து ஒரு சிங்கிள். 3வது பந்து, டாட். 4வது பந்தில் திவாட்டியா காலி. ரூஸோவிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். 5வது பந்தை ரஷீத் கான் இழுத்து அடிக்க, அற்புதமாக பாய்ந்து தடுத்தார் ரூஸோ. 2 ரன்கள். கடைசிப்பந்தில் சிக்ஸர் அடித்தால் சூப்பர் ஓவர். வெறும் 1 ரன் மட்டுமே கொடுத்தார் இஷாந்த் சர்மா. 5 ரன்கள் வித்தியாசத்தில், முதலிடத்தில் இருக்கும் டைட்டன்ஸை வீழ்த்தியது 10வது இடத்திலிருக்கும் கேபிடல்ஸ். சமீபமாக, தோற்ற அணிகளிலிருந்தே தொடர்ச்சியாக ஆட்டநாயகன் விருது வாங்கிவருகிறார்கள். அப்படி, இந்த ஆட்டத்தின் ஆட்டநாயகனாக முகமது ஷமி தேர்ந்தெடுக்கபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com