LSGvRCB | ரைவ்லரி வாரம்... எத்தனை அடிதடி... பஞ்சாயத்தாடா இதெல்லாம்!

இன்னொரு பக்கம், நவீனை அழைத்து கோலியுடன் சமாதனம் பேச முயன்றார் கே.எல். அப்போது, நவீன் `அதெல்லாம் வர முடியாது' என்பது போல் சைகை காட்ட, கேப்டன் ராகுலுக்கும் இப்போது கோவம் தலைக்கேறியது. `பஞ்சாயத்தாடா இது! எனக்கு இங்கே மரியாதையே இல்லடா' என வெறுப்பானார்.
LSGvRCB
LSGvRCBAtul Yadav

நேற்றிரவு லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸும், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் அணியும் மோதிய போட்டி டீக்கடையை தீக்கடையாக்கி, ஊரை போர்களமாக்கிய கதையாக முடிந்துவிட்டது. 2013-ம் ஆண்டு கொல்கத்தாவுக்கும் பெங்களூருக்கும் நடந்த ஐ.பி.எல்லில் ஆரம்பித்த சண்டை இது. `போன தைப்பூசத்துக்கு அடிச்சவனையா தேடிட்டு இருக்கீங்க. போய் பொழப்பை பாருங்க' என சொல்லும் பொதுசனம், கிட்டதட்ட 10 ஆண்டுகால பகையாக வளர்ந்து நிற்கும் கம்பீர் - கோலி பிரச்னையைப் பார்த்து அதிர்ச்சியில்தான் இருக்கிறது. இதே சீசனில் இந்த இரு அணிகளுக்கும் இடையே சின்னசாமி மைதானத்தில் நடந்த போட்டியில், 213 எனும் இலக்கை அசாத்தியமான முறையில் எட்டிப்பிடித்து வென்றது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். 15 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்ட நிக்கோலஸ் பூரன், ஃப்ளையிங் கிஸ் அடித்தார்.

Avesh Khan
Avesh Khan

பூரனாவது ஆர்.சி.பி முகத்தில் பூரான் விட்டார், ஃப்ளையிங் கிஸ் அடித்தார். ஆனால், கடைசி ஓவரில் 5 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், கடைசி பந்தில் 5வது ரன்னை எடுத்த ஆவேஷ், ஹெல்மெட்டை ஆவேசமாக தரையில் தூக்கி அடித்து, அபராதம் எல்லாம் வாங்கினார். பிஷ்னோய் எனும் சிறுவனும் வெற்றிக்குறி மூவ்மென்ட் போட்டு பீஸ் பீஸாக கிழிக்கும்போது ஏசு போல முகத்தை வைத்திருந்தார் கோலி.

இத்தனை ஆண்டுகளாக கப் காமெடிகளை எல்லாம் காதில் வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு சீசனிலும் கண்ணன் தேவன் டீ குடித்து தெம்பாக ஆதரவு தெறிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள் எல்லாம் விராட் கோலியின் பார்வையில் தெய்வத்திற்கு சமானம். அப்படிபட்ட பெங்களூர் ரசிகர்களை நோக்கி, ஆட்டம் முடிந்த பிறகு வாயில் விரல் வைத்து `உஷ்ஷ்' என சைகை காட்டினார் பெரிய மனிதர் காம்பீர். இன்னொரு பக்கம், ஒரு பாவப்பட்ட ஆர்.சி.பி அபலை கண்ணீர் விட்டு கதறும் புகைப்படத்தை இன்ஸ்டா ஸ்டோரியில் மீம்ஸாகவும் பதிவேற்றினார் பூரன். இதை எல்லாம் வெறுப்பான கோலி, வன்மங்கள் தனக்குள்ளேயே இருந்தால் அது விஷமாக மாறி தன்னையே கொன்றுவிடும் என்பதை உணர்ந்து, சமயம் பார்த்து வன்மத்தை கக்கிவிட காத்திருந்தார். சமயமும் நேற்றிரவு வந்தது.

LSGvRCB
RCBvLSG | கோலி சிரிக்க, டூப்ளெஸ்ஸி சிரிக்க, ரசிகர்கள் சிரிக், போட்டியும் பெங்களூருக்கு சிரித்தது..!

லக்னோவில் நடந்த போட்டியில், டாஸ் வென்ற ஆர்.சி.பி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. சில நேரங்களுக்கு முன்புதான் மழை பெய்திருந்தது. டாஸ் வென்று சேஸிங் எடுப்பதுதான் உசிதம். ஆனாலும், ஆர்.சி.பி வேறேதோ திட்டம் போட்டிருந்தது. ஹேசல்வுட் அணிக்கு திரும்பியிருப்பது, கேதர் ஜாதவ் எனும் அசாத்திய ஆல்ரவுண்டர் அணிக்குள் புதிதாக வந்திருப்பது, டூப்ளெஸ்ஸி காயத்திலிருந்து குணமாகியுள்ளது என முழு நம்பிக்கையுடன் களமிறங்கியது ஆர்.சி.பி!

கோலியும், டூப்ளெஸ்ஸியும் ஆர்.சி.பியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் க்ருணால். முதல் பந்தே கோலியின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு விரைந்தது. அந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே. ஸ்டாய்னிஸ் வீசிய 2வது ஓவரில், டூப்ளெஸ்ஸி ஒரு பவுண்டரி அடித்தார். அந்த பந்தை விரட்டிச் சென்ற கேப்டன் ராகுல், திடீரென தடுமாறி வலது தொடையைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்தார். ஃபிஸியோ, ஸ்ட்ரச்சரை வர சொல்லும் அளவிற்கு பலத்த காயம். ஆனாலும், கே.எல்.ராகுல் நடந்தே வருகிறேன் என நடந்தே டிரெஸ்ஸிங் ரூமிற்குச் சென்றார். தற்காலிமாக, கேப்டன் காப்பை க்ருணாலின் கையில் மாட்டிவிட்டார்கள்.

Virat Kohli | Faf du Plessis
Virat Kohli | Faf du Plessis Atul Yadav

க்ருணால் வீசிய 3வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே. நவீன் உல் ஹக் வீசிய 4வது ஓவரில், டூப்ளெஸ்ஸி ஒரு சிக்ஸர் அடிக்க, கோலி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைத்தது. க்ருணாலின் 5வது ஓவரில் 5 ரன்கள் கிடைத்தது. 6வது ஓவரை வீசவந்தார் பிஷ்னோய். அதிலும் 5 ரன்கள் மட்டுமே. பவர்ப்ளேயின் முடிவில் 42/0 என மெதுவான பிட்சில் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது ஆர்.சி.பி! அமித் லாலேட்டனின் 7வது ஓவரில், 7 ரன்கள் மட்டுமே. யாஷ் தாகூர் வீசிய 8வது ஓவரில், கோலி ஒரு பவுண்டரி அடித்தார். பிஷ்னோயின் 9வது ஓவரில், கோலியின் விக்கெட் காலியானது. கொஞ்சம் அகலமாக தூக்கி வீசிய பந்தை இறங்கி வந்து ஆட முயன்ற கோலியை, ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றினார் பூரன். கடந்த மேட்சில், வெற்றிக்குறி மூவ்மென்ட் போட்ட பிஷ்னோய், தன்னை அவுட் ஆக்கி மூவ்மென்ட் போட்டதையும், மீம்ஸ் போட்ட பூரன் ஸ்டெம்பிங் அடித்ததையும் கோலியால் தாங்கிகொள்ள முடியவில்லை. கிருஷ்ணப்ப கௌதமின் 10வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமெ கிடைக்க, 10 ஓவர் முடிவில் 65/1 என லக்னோ பிட்சுடன் போராடிக்கொண்டிருந்தது பெங்களூர்.

பிஷ்னோயின் 11வது ஓவரிலும், 6 ரன்கள் மட்டுமே கிடைத்தது. கௌதமின் அடுத்த ஓவரில், அனுஜ் ராவத் ஆட்டமிழந்து வெளியேறினார். இனி அடித்து ஆட வேண்டிய கட்டம் என்பதை உணர்ந்து பந்தை தூக்கியடிக்க, கட்டம் சரியில்லாமல் கேட்சாகி வெளியேறினார். அடுத்து மேக்ஸ்வெல் களமிறங்க, பெங்களூர் ரசிகர்கள் ஆர்வமானார்கள். அவரோ அடுத்த ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடுகிறேன் என பிஷ்னோயின் பந்தில் எல்.பி.டபிள்யுவாகி நடையைக் கட்டினார். க்ருணாலின் 14வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. அமித் லாலேட்டனின் 15வது ஓவரில், பிரபுதேசாயும் அவுட். 15 ஓவர் முடிவில் 92/4 என பரிதாபகரமான நிலைக்கு போய்விட்டது ஆர்.சி.பி!

Ravi Bishnoi | Glenn Maxwell
Ravi Bishnoi | Glenn MaxwellAtul Yadav

நவீன் உல் ஹக்கின் 16வது ஓவரில், கார்த்திக் ஒரு பவுண்டரி அடித்தார். மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில், டி.கே ஒரு சிக்ஸரை பறக்கவிட, டூப்ளெஸ்ஸி அவுட் ஆனார். 40 பந்துகளில் 44 எனும் போராட்டமிகு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. 18வது ஓவரை வீசிய நவீன், லோம்ரோரின் விக்கெட்டைத் தூக்கினார். எப்போதும் அடுத்தவர்களை ரன் அவுட் ஆக்கிவிடும் டி.கே, 19வது ஓவரில், தனக்கு தானே ரன் அவுட் ஆனார். கடைசி ஓவரில், நவீன் உல் ஹக்கின் வேகத்திற்கு விக்கெட்டை பறிகொடுத்தார் கர்ன் சர்மா. அடுத்த களமிறங்கிய சிராஜும், முதல் பந்திலேயே அவுட். ஹாட்ரிக் பந்தை சந்தித்த ஹேஸல்வுட், எந்த தவறும் செய்யவில்லை. ஓவரின் கடைசி பந்தை ஹசரங்கா பவுண்டரிக்க விரட்ட, 126/9 என மிகவும் சுமாரான ஸ்கோருடன் இன்னிங்ஸை முடித்தது.

127 எனும் இலக்கை எட்டிப்பிடிக்க தயாரானது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ். கேப்டன் ராகுல் காயம் காரணமாக அவதிப்படுவதால், பதோனியும் ஆட்டத்தை துவக்கினார் மேயர்ஸ். முகமது சிராஜ் முதல் ஓவரை வீசினார். ஓவரின் 2வது பந்து, மேயர்ஸ் அவுட்! மிட் ஆனில் கேட்ச் கொடுத்து, லக்னோ ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அட்டகாசமாக துவங்கியது ஆர்.சி.பி. 1 ரன் மட்டுமே. ஹேசல்வுட் வீசிய 2வது ஓவரில், 1 ரன் மட்டுமே. சிராஜின் 3வது ஓவரில், எல்லாவற்றுக்கும் சேர்த்து ஹாட்ரிக் பவுண்டரிகள் அடித்தார் க்ருணால். அந்த ஓவரின் 16 ரன்கள். 4வது ஓவரை வீசிய மேக்ஸ்வெல், க்ருணாலின் விக்கெட்டை தூக்கினார். லாங் ஆஃபில் நின்று கேட்ச் பிடித்த கோலி, ``உஷ்ஷ்'னு எல்லாம் எங்க கிட்ட காட்ட கூடாது. நாங்க ஆர்.சி.பி' என்பது போல் ஒரு சைகை காட்டினார். இதுவும் உத்தேசமான மொழி பெயர்ப்புதான். எதற்காக அப்படி செய்தார், என்ன சொல்லவந்தார் என்பது கோலிக்கே வெளிச்சம். கோலி தன்னை திருப்பி அடித்துவிட்டதாக நினைத்த காம்பீருக்கு உள்ளுக்குள் எரிமலை வெடித்தது.

Virat Kohli
Virat KohliAtul Yadav

ஹேசல்வுட் வீசிய 4வது ஒவரின் முதல் பந்திலேயே, பதோனி அவுட். இம்முறை கேட்ச் பிடித்ததும் அதே கோலி. வெறியாகி வெற்றிக்குறி மூவ்மென்ட் எல்லாம் போட்டார். ஆவேஷ் கான், பிஷ்னோய் உள்ளிட்டோர் அப்படியே பதுங்கினார்கள். அடுத்து களமிறங்கிய ஸ்டாய்னிஸ், அதே ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார். ஹசரங்காவின் 6வது ஓவரில், ஹூடாவை ஸ்டெம்பிங் அடித்தார் டி.கே! லக்னோ ரசிகர்கள் மீண்டும் மழை வராதா என வானத்தைப் பார்த்து வேண்டத் துவங்கினார்கள். அடுத்து களமிறங்கிய பூரன், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். சிக்ஸர் மழை வந்தாலும் ஒகேதான் என வெட்கபட்டார்கள் லக்னோ ரசிகர்கள். பவர்ப்ளே முடிவில் 34/4 என பெங்களூருவை விட பரிதாபமான நிலையிலிருந்தது லக்னோ. அவர்களுடைய பிட்ச், அவர்களையே காவு வாங்கியது.

கர்ண் சர்மாவின் 7வது ஓவரில், பூரனும் அவுட் ஆனார். லக்னோ அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது. ஹசரங்காவின் 8வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே. கர்ன் சர்மாவின் 9வது ஓவரை ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அதிரடியாக துவங்கினார் கிருஷ்ணப்பா கௌதம். அவரே ஹசரங்கா வீசிய அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார். பத்து ஓவர் முடிவில் 63/5 என ஏதோ ஆடிக்கொண்டிருந்தது லக்னோ. ஹர்ஷல் படேலை இம்பாக்ட் வீரராக இறக்கினார் டூப்ளெஸ்ஸி.

LSGvRCB
LSG vs RCB: வார்த்தைப் போரில் ஈடுபட்ட கம்பீர், கோலி - ஜென்டில்மேன் Game-க்கு என்னாச்சு?

கர்ன் வீசிய 11வது ஓவரில், ஸ்டாய்னிஸ் கொடுத்த கேட்சை எடுத்தார் பிரபுதேசாய். ஒவ்வொரு விக்கெட்டையும் கோலி, வெறித்தனமாகக் கொண்டாடினார். ஹர்ஷலின் 12வது ஒவரில், நம்பிக்கை கொடுத்த கௌதமும் 23 ரன்களில் அவுட். கர்ன் சர்மாவின் 13வது ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. ஹர்ஷலின் 14வது ஓவரில் 4 ரன்கள். லோம்ரோர் வீசிய 15வது ஓவரில், பிஷ்னோய் பேக்வார்டு பாயின்ட் திசையில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட, கேட்சை கோட்டைவிட்டார் ஹேசல்வுட். ஆனால், அடுத்த நொடியே பந்தை எடுத்து விருட்டென எறிய, பிடித்து ரன் அவுட் அடித்தார் கார்த்திக். பிஷ்னோய் அவுட்! அடுத்து களமிறங்கினார் நவீன் உல் ஹக்.

ஹசரங்காவின் 16வது ஓவரில் 1 ரன் மட்டுமே கிடைத்தது. இந்த ஓவரிலேயே, கோலிக்கும் நவீனுக்கும் இடையே சின்ன சலசலப்பு. மூத்தவரான அமித் மிஸ்ராவை அழைத்து ஏதோ நியாயம் கேட்டார் கோலி. அமித்துக்கு என்ன சொல்வதென புரியவில்லை. நடுவர்கள் நடுவில் வந்து பேச்சை விலக்கினார்கள். கோலி இடையில் தனது காலை உயர்த்தி ஷூவை காண்பித்தார். `பிட்சுக்கு நடுவுல ஸ்பைக் வெச்சிகிட்டு ஓடுறாப்ல' என புகார்தான் சொன்னார் கோலி என்று சிலரும், `நீ எல்லாம் என் கால் தூசிக்கு சமம்டா' என நவீனை சாடினார் கோலி என்று சிலரும் சொல்கிறார்கள். இந்த உண்மையும் அங்கிருந்தவர்களுக்கே வெளிச்சம்.

17வது ஓவரை வீசவந்தார் சிராஜ். கோலியை அவுட் ஆக்கிய பவுலர்கள், கேட்ச் பிடித்த ஃபீல்டர்கள் பேட்டிங் இறங்கினாலே வெச்சி செய்யும் சிராஜ், நவீன் உல் ஹக் மீது கொலைவெறியில் இருந்தார். இந்த ஓவரில் எட்ஜாகி ஒரு பவுண்டரி வேறு சொல்ல, கோவம் தலைக்கேறியது. ஓவரின் கடைசிப்பந்தை கையில் எடுத்து, நவீனை முறைத்துப் பார்த்த சிராஜ், ஸ்டெம்ப்பில் வேகமாய் பந்தை எறிந்தார். நவீன் முகத்திலும் அவ்வளவு கோவம்! இன்னும் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தால் லக்னோ வெற்றி. கையில் இரண்டே விக்கெட்கள்.

ஹர்ஷலின் 18வது ஓவரில், ஒரு பவுண்டரி அடித்தார் நவீன். ஹேசல்வுட்டின் 19வது ஓவரிலும் இன்னொரு பவுண்டரி அடித்தவர், அடுத்த பந்திலேயே கீப்பரிடம் கேட்சாகி வெளியேறினார். காயத்தால் அவதிபட்டபோதும் அணிக்காக களமிறங்கினார் கேப்டன் ராகுல். கடைசி 6 பந்துகளில் 23 ரன்கள். ஓவரின் 5வது பந்தில் அமித் அவுட்டாக்க, 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பதிலடி கொடுத்தது ஆர்.சி.பி! ஆட்டத்தில் ஜெயித்துவிட்டு தெம்பாக டொரினோ குடிக்கலாம் என காத்திருந்த காம்பீர், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். மேட்ச் முடிந்து எல்லா வீரர்களும் வரிசையில் நின்று சமாதன முறையில் கை குலுக்கு நிகழ்வில், கோலிக்கும் நவீனுக்கும் இடையே மீண்டும் முட்டிக்கொண்டது. கோலியின் பின்னாலிருந்த மேக்ஸ்வெல், இருவரும் ஏதோ இந்தியில் பேசுகிறார்கள் என்றே நினைத்தார். பிறகு, கோலியின் ஆஸ்தான கெட்டவார்த்தை உதிர, அதிர்ச்சியானர் மேக்ஸ்வெல். `இவ்வளவு நேரம் சண்டைதான் போட்டீங்களாடா' என பயந்துபோனார்.

Kohli | Gambhir
Kohli | Gambhir Shailendra Bhojak

அடுத்து வரிசையில் வந்த கம்பீர் வெடுக்கென கோலியிடம் கை குலுக்கினார். கோலி இப்போது கொஞ்சம் அமைதியாகியிருந்தார். லக்னோ வீரர் மேயர்ஸ், கோலியிடம் வந்து பேசத் துவங்க, அவரிடம் வந்து `இவன் கூட சேராதே' என்பதுபோல் அழைத்துக்கொண்டு போனார் கம்பீர். இது கோலிக்கு மீண்டும் கோவத்தை ஏற்படுத்த, 2013-ல் நடந்த சம்பவம் மீண்டும் அரங்கேறியது. அத்தனை வீரர்களுக்கு மத்தியில் கோலி-கம்பீர் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். முழுக்க இந்தியில், அதுவும் டெல்லி வட்டார வழக்கில் பரிமாறபட்ட அற்புதமான வார்த்தைகள் புரியாததால் டூப்ளெஸ்ஸி, ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் போன்றோர் பக்கத்து க்ளாஸ் மாணவர்களைப் போல சிரித்துக்கொண்டு நின்றார்கள்.

ஆமாம், அப்படியே பள்ளி மைதானங்களில் நடக்கும் சண்டையைப் பார்ப்பது போலவே இருந்தது. ஆவேஷ் கான் எங்கு போனார் என்று தெரியவில்லை. பிஷ்னோய் எல்லாம் மேசையின் கீழ் பதுங்கிவிட்டார் போல. காயத்தால் அவதிபட்டபோதும் கேப்டன் ராகுல் மட்டும், சண்டையை விலக்க அரும்பாடு பட்டார். கம்பீர் அவரை மதிக்கவே இல்லை.

இன்னொரு பக்கம், நவீனை அழைத்து கோலியுடன் சமாதனம் பேச முயன்றார் கே.எல். அப்போது, நவீன் `அதெல்லாம் வர முடியாது' என்பது போல் சைகை காட்ட, கேப்டன் ராகுலுக்கும் இப்போது கோவம் தலைக்கேறியது. `பஞ்சாயத்தாடா இது! எனக்கு இங்கே மரியாதையே இல்லடா' என வெறுப்பானார். கிரிக்கெட் மேட்ச் பார்க்க மைதானத்திற்கு வந்த ரசிகர்கள், போனஸாக ரெஸ்லிங் மேட்சும் பார்த்த திருப்தியில் வீட்டுக்கு கிளம்பினார்கள். `ஆத்தி, ஆர்.சி.பிக்கு அடுத்த மேட்ச், நம்ம கூடதானே' என பீதியில் ஆழ்ந்தார் சவுரவ் கங்குலி. `உன் தேவாவை முறைச்சிட்டான். நீதான் அவனை அடுத்த மேட்ச்ல அடிக்கணும் தாஸ்ணா' என ஆர்.சி.பி ரசிகர்கள் தோனியிடம் முறையிட துவங்கினார். ரைவல்ரி வாரம், அட்டகாசமாக துவங்கியிருக்கிறது!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com