”மன்சூர் அலிகான் பட்டோடி கோப்பைக்கு ஓய்வா.. இங்கிலாந்து அணி என்ன யோசிக்கிறது?” - கவாஸ்கர் கண்டனம்!
இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் வழங்கப்படும் பரிசுக்கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் புதிய பெயரில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 2007-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா -இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி பெயரில் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்தக் கோப்பைக்கு ஓய்வு கொடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஆஸ்திரேலியா - இந்தியா மோதும் பார்டர்-கவாஸ்கர் கோப்பைபோல இந்தியா-இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 2 ஜாம்பவான்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த முடிவுக்கு இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “பட்டோடி கோப்பைக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஓய்வு கொடுக்க உள்ளதாக வந்துள்ள தகவல்கள் ஏமாற்றம் அளிக்கிறது. இங்கிலாந்தின் இந்த முடிவு பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த முடிவு இந்தியா -இங்கிலாந்து ஆகிய 2 கிரிக்கெட்டுக்கும் பட்டோடிகள் ஆற்றிய பங்களிப்பிற்கு முழுமையான பதில் உணர்திறன் இல்லாததைக் காட்டுகிறது.
சமீபத்திய வீரர்களின் பெயரில் புதிய கோப்பையை உருவாக்குவதற்காக இங்கிலாந்து வாரியம் எந்த இந்திய வீரரையாவது அணுகினால் அவர்கள் அதை மரியாதையுடன் மறுக்க வேண்டும். இது நமது 2 முன்னாள் கேப்டன்களின் மரியாதைக்காக செய்யப்பட வேண்டிய ஒன்று. வேண்டுமானால் அந்தக் கோப்பையின் பெயரில் இங்கிலாந்து தங்கள் நாட்டின் ஒரு வீரர் பெயரை இணைத்துக் கொள்ளலாம். அதை இந்தியர்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள். ஆனால் பட்டோடி வரலாறு மீண்டும் பேசப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல் பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூர், “டைகரின் பாரம்பரியத்தை பிசிசிஐ நினைவில் கொள்ள விரும்புகிறதா இல்லையா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் உறவுகளின் 75 ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், 2007ஆம் ஆண்டு முதன்முறையாக பட்டோடி கோப்பை வழங்கப்பட்டது. முன்னாள் இந்திய கேப்டனான மன்சூர் அலி கான் பட்டோடி, நாட்டிற்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 34.91 சராசரியில் 2,793 ரன்கள் எடுத்திருந்தார்.