“எந்தப் போட்டியிலும் பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது” - கவுதம் காம்பீர்
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மறுபுறம், இந்தியா, இனி எப்போதுமே பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது எனக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் உடனான இருநாட்டு கிரிக்கெட் தொடர் கிடையாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கலைக்கப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ”பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுடனான அனைத்துப் போட்டிகளையும் நிறுத்த வேண்டும்” என இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வரும்வரை தேசிய அணி பரம எதிரிகளுடன் விளையாடக்கூடாது. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள் காரணமாக 2007 முதல் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவொரு முழுத் தொடரிலும் விளையாடவில்லை. இரு அணிகளும் பல அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் மட்டுமே ஒருவருக்கொருவர் விளையாடுகிறார்கள். அதுவும்கூட நிறுத்தப்பட வேண்டும். நாம் விளையாடுகிறோமா, இல்லையா என்பது அரசாங்கத்தின் முடிவாகும்.
இதை நான் முன்பே கூறியுள்ளேன். கிரிக்கெட் போட்டியோ அல்லது பாலிவுட்டோ அல்லது வேறு எந்த தொடர்பு நிகழ்வுகளோ இந்திய வீரர்கள் மற்றும் இந்திய குடிமக்களின் உயிரைவிட முக்கியமானது அல்ல. போட்டிகள் தொடர்ந்து நடக்கும். திரைப்படங்கள் உருவாகும். பாடகர்கள் தொடர்ந்து நிகழ்ச்சி நடத்துவார்கள். ஆனால் நமது குடும்பத்தில் ஓர் அன்புக்குரியவரை இழப்பதற்கு எதுவும் ஈடில்லை. இந்த ஆண்டு ஆசியக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா என்பது குறித்து பிசிசிஐ மற்றும் அதைவிட முக்கியமாக அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும், நாம் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை அரசியலாக்கக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி இடையே உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐசிசி நிகழ்வுகளில் உள்ள அனைத்து இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளும் 2027 சுழற்சி வரை ஒரு நடுநிலையான நாட்டில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.