இந்தியா - பாகிஸ்தான் உறவில் தொடர் விரிசல் | “ACC கலைக்கப்படலாம்” - கவாஸ்கர் கணிப்பு!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. மறுபுறம், இந்தியா, இனி எப்போதுமே பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது எனக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதற்கிடையே, பாகிஸ்தான் உடனான இருநாட்டு கிரிக்கெட் தொடர் கிடையாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) கலைக்கப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆசியக் கோப்பையை இலங்கையுடன் இணைந்து இந்தியா நடத்துகிறது. இந்த நிகழ்விற்கான தேதிகள் மற்றும் இடங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக இந்த ஆண்டு ஆசியக் கோப்பை நடைபெறாமல் போகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர், “பிசிசிஐயின் நிலைப்பாடு எப்போதும் இந்திய அரசாங்கம் சொல்வதையே செய்துவருகிறது. எனவே ஆசியக் கோப்பையைப் பொறுத்தவரை அது வேறுபட்டதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த ஆண்டுக்கான, ஆசியக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் நடத்துகின்றன. எனவே விஷயங்கள் மாறிவிட்டனவா என்பதைப் பொறுத்தது. ஒருவேளை நிலைமைகள் மாறவில்லை என்றால், இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் இப்போது ஒரு பகுதியாக இருப்பதை என்னால் பார்க்க முடியாது.
நிலைமை மேம்படவில்லை என்றால் ACC (ஆசிய கிரிக்கெட் கவுன்சில்) கலைக்கப்படலாம். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் இருந்து இந்தியா விலக முடிவு செய்தால் அது நடக்கலாம். நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களைக் கொண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரண்டு நாடுகள் ஒன்றுக்கொன்று எதிராகப் போராடினால், ஒன்றோடொன்று விளையாடுவது கொஞ்சம் கடினம். எனினும், அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.