பஹல்காம் தாக்குதல் | ”உங்களுக்கு வெட்கமா இருக்கு” பாக். பிரதமருக்கு முன்னாள் வீரர் முக்கிய கேள்வி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. மேலும், மத்திய அரசும் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனால் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீஃப் அமைதியாக இருந்ததற்காக அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே எந்தப் பங்கும் இல்லை என்றால், பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஏன் இன்னும் அதைக் கண்டிக்கவில்லை? உங்கள் படைகள் ஏன் திடீரென்று உஷார் நிலையில் உள்ளன? ஏனென்றால், உங்களுக்கு உண்மை தெரியும். நீங்கள் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறீர்கள். உங்களுக்கு வெட்கமாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.