பஹல்காம் தாக்குதல்| ”இனி எப்போதும் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம்” - கொந்தளித்த விளையாட்டு வீரர்கள்!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் ‘மினி சுவிட்சர்லாந்து’ எனப் பலராலும் அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு கோடைக்காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இந்தச் சூழலில் சுற்றுலாப் பயணிகள் அங்குச் சென்றிருந்த நிலையில் அவர்கள் மீது பயங்கரவாதிகள் நேற்று பிற்பகல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் ஓர் இந்திய கடற்படை அதிகாரி மற்றும் ஒரு புலனாய்வுப் பணியக அதிகாரியும் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் (LeT) பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியும் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர், “அப்பாவி இந்தியர்களைக் கொல்வது பாகிஸ்தானின் தேசிய விளையாட்டாகத் தெரிகிறது. இந்தியா மட்டைகளாலும் பந்துகளாலும் அல்ல. மாறாக, சகிப்புத்தன்மையுடன் பதிலளிக்க வேண்டும். இப்போது... மீண்டும் இந்த இரத்தக்களரி. இது உங்களுக்குள் ஏதோ ஒன்றை உடைக்கிறது. நம் மக்கள் இறக்கும்வரை, நாம் இன்னும் எத்தனை முறை அமைதியாக இருக்க வேண்டும்? ’விளையாட’ வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறோம் என்று இது உங்களை கேள்வி கேட்க வைக்கிறது. இனி இல்லை. இந்த முறை இல்லை. இதனால்தான் நான் சொல்கிறேன் - நீங்கள் பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட வேண்டாம். இப்போது இல்லை. எப்போதும் இல்லை” என அவர் தெரிவித்திருப்பதுடன், இதுதொடர்பாக அவர் பிசிசிஐக்கும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அதுபோல் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், "இந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு நமது துணிச்சலான வீரர்கள் வரும் காலங்களில் நிச்சயமாக தகுந்த பதிலடி கொடுப்பார்கள். இந்தியத் தாயின் துணிச்சலான மகன்களின் முன்னிலையில், ஜம்மு காஷ்மீரில் அமைதியைக் குலைக்க விரும்புவோரின் திட்டங்கள் ஒருபோதும் வெற்றிபெறாது" என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்கு காரணமானவர்கள் உரிய விலை நிச்சயம் கொடுக்க வேண்டியிருக்கும். இந்தியா தாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவும் உணர்ச்சிபூர்வமான பதிவை எழுதியுள்ளார். அவர், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக என் இதயம் வலிக்கிறது. இவ்வளவு வலி. இவ்வளவு இழப்பு. எந்தக் காரணமும், இத்தகைய கொடூரத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. பின்தங்கிய குடும்பங்களுக்கு - உங்கள் துயரம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், நீங்கள் தனியாக இல்லை. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். இந்த இருண்ட தருணங்களில், நாம் ஒருவருக்கொருவர் பலத்தைக் காண்போம், அமைதி திரும்பும் என்ற நம்பிக்கையை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, இந்திய நட்சத்திரங்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக எந்தவிதமான இருதரப்பு தொடரிலும் விளையாடாமல் இருந்துவருகின்றன. இருநாட்டிற்கும் இடையே இருக்கும் அரசியல் பதற்றம் காரணமாக இருநாட்டின் கிரிக்கெட் அணிகளும் இருதரப்பு தொடர்களில் இருந்து விலகியே இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளும் சந்தித்துக்கொள்ளும் ஒரே இடமாக ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை தொடர்களாக மட்டுமே இருந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.