அடேங்கப்பா செம்ம..! 5 பந்தில் தொடர்ச்சியாக 5 விக்கெட்.. மிரட்டிய அயர்லாந்து பவுலர்!
அயர்லாந்தில் இன்டர்-மாகாண டி20 டிராபியில் முன்ஸ்டர் ரெட்ஸ் மற்றும் நார்த்-வெஸ்ட் வாரியர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த முன்ஸ்டர் ரெட்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர். பின்னர், 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நார்த்-வெஸ்ட் வாரியர் அணி, ஒருகட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.
12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில், அதாவது 5 பந்தில் ஜாரெட் வில்சனை கிளீன்-போல்டு முறையிலும், அதைத் தொடர்ந்து, 6வது பந்தில் கிரஹாம் ஹியூமை எல்பிடபிள்யூ முறையிலும் வெளியேற்றினார். பின்னர் மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்திலேயே ஆண்டி மெக்பிரைனை அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். பின்னர் அடுத்த இரண்டு பந்துகளில் ராபி மில்லரையும் ஜோஷ் வில்சனையும் அவுட்டாக்கி, ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஆண்கள் கிரிக்கெட்டில் இதுவரை இல்லாத சாதனையாகும்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டது. முன்ஸ்டர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது. அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தார். ஏற்கெனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021இல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில்முறை கிரிக்கெட்டில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் கேம்பர் என்றாலும், ஒட்டுமொத்த கிரிக்கெட் வீரர்களில் அவர் முதல் நபர் அல்ல. அந்த சிறப்பு, ஜிம்பாப்வே மகளிர் ஆல்ரவுண்டர் கெலிஸ் நத்லோவுக்கு சொந்தமானது. அவர் 2024ஆம் ஆண்டு உள்நாட்டு டி20 போட்டியில் ஈகிள்ஸ் மகளிர் அணிக்கு எதிராக ஜிம்பாப்வே யு-19 அணிக்காக ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.