15 பந்து, 5 ரன், 6 விக்கெட்: அசத்தினார் போல்ட், அடங்கியது இலங்கை!
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட், வெறும் 15 பந்துகளில் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இலங்கை கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 178 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் சுரங்கா லக்மல் 5 விக்கெட்டுகளும், லஹிரு குமாரா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்திருந் தது. மேத்யூஸ் (27 ரன்), ரோஷன் சில்வா (15 ரன்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நியூசிலாந்து வேகப் பந்து வீச்சாளர் போல்ட் அதிரடியாக பந்துவீசினார். அவரது வேகத்தில் இலங்கை அணி தடுமாறியது. வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, பின் வரிசையின் ஆறு விக்கெட்டையும் அவர் தனது வேகத்தால் அள்ளினார். இதில் நான்கு பேர், டக் அவுட் என்பது குறிப்பிடத்தக்கது.
15 ரன் எடுத்திருந்த ரோஷன் சில்வா, இன்று இன்னும் ஆறு ரன் சேர்த்த நிலையில் போல்ட் பந்துவீச்சில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லா வந்தார். பவுண்டரி விளாசிய அவர், வெறும் 4 ரன்களில் போல்ட் பந்துவீச்சில் சவுதியிடம் கேட்ச் கொடுத்து, சில்வா போலவே ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பெரேரா, லக்மல், சமீரா, லஹிரு குமாரா ஆகியோரை அடுத்தடுத்து எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்க செய்தார் போல்ட். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 104 ரன்னுக்கு அந்த அணி ஆட்டமிழந்தது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 8 மணி அளவில் விக்கெட் இழப்பின்றி 102 ரன் எடுத்து ஆடி வருகிறது.