3வது டி20 | பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்து அணி.. 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி!
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடுகிறது.
முதலில் தொடங்கப்பட்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகள் கொல்கத்தா மற்றும் சென்னை ஆடுகளங்களில் நடைபெற்றன. இரண்டு போட்டியிலும் அசத்தலான வெற்றியை பதிவுசெய்த இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி மோதும் 3வது டி20 போட்டியானது ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட முகமது ஷமி தன்னுடைய கம்பேக் போட்டியில் இன்று களமிறங்கினார்.
இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..
பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கவீரர் பென் டக்கெட்டின் அதிரடியான அரைசதம் மற்றும் லிவிங்ஸ்டனின் அசத்தலான 5 சிக்சர்கள் உதவியால் 20 ஓவரில் 171 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. அபாரமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.
இங்கிலாந்தை தொடர்ந்து 172 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணியில், சஞ்சு சாம்சன் 3வது ஓவரிலேயே வெளியேறினார். அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகளை விளாசி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும் நீண்டநேரம் நிலைக்கவில்லை.
அவரைத்தொடர்ந்து களத்திற்கு வந்த சூர்யகுமார், திலக் வர்மா இருவரும் 1 சிக்சர், 1 பவுண்டரி என அடித்தாலும் விரைவாகவே வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இந்திய வீரர்களுக்கு தன்னுடைய சுழற்பந்துவீச்சுமூலம் தண்ணி காட்டினார் அடில் ரசீத். 4 ஓவரில் வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த அவர் ஆட்டத்தை கண்ட்ரோல் செய்ய, ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முடிவில் கடைசி 3 ஓவர்களுக்கு 18 ரன்கள் வீதம் என்ற நிலையில் இருந்த இந்திய அணியில், ஹர்திக் பாண்டிய ஓரிரு சிக்சர் பவுண்டரி அடித்தாலும் அவராலும் இறுதிவரை எடுத்துச்செல்ல முடியவில்லை. இறுதியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 2-1 என மாறியுள்ளது.