IPL 2025 | ரிங்குவை அறைந்த குல்தீப்.. வெடித்த விவகாரம்.. முற்றுப்புள்ளி வைத்த டெல்லி!
இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், நேற்றைய போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எனினும், இந்தப் போட்டியில் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. இதற்கிடையே, இந்தப் போட்டி முடிந்த பிறகு இரண்டு அணி வீரர்களும் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தனர். ரிங்கு சிங் மற்றும் குல்தீப் யாதவ் சக வீரர்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென குல்தீப் யாதவ் அருகில் இருந்து ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு முறை அல்ல.. இரண்டு முறை பேசிக்கொண்டிருக்கும்போதே ரிங்கு சிங்கை குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குல்தீப் யாதவ் விளையாட்டாக கன்னத்தில் அறைந்தது போல் இருந்தாலும் அதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரிங்கு சிங், சில நொடிகளில் கோபமடையும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
எனினும், சமூக ஊடகங்களில் குல்தீப்பின் செயலுக்கு கடும் எதிர்வினை கிளம்பியுள்ளது. இருப்பினும், சம்பவத்திற்குப் பிறகு இருவரும் ஒன்றாக ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வீடியோவை டெல்லி அணி வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.