இப்படி பந்துகளை வீணடித்தால் கத்த தானே செய்வார்கள்' - ஜடேஜாவை வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ஐபிஎல் சீசன் வேகம் பிடித்து வருகிறது. அடுத்த சுற்றில் நுழைவதற்காக அனைத்து அணிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில், சென்னை அணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திர ஜடேஜா மீண்டும் பேட்டிங்கில் சொதப்பி வருவதால் ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
ஜடேஜா
ஜடேஜாfile image

ஐபிஎல் நடப்பு சீசனில் 61வது லீக் போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தாவும் எதிர்கொண்டன. இதில் டாஸ் ஜெயித்த சென்னை முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்கள் எடுத்தார். 145 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடி வருகிறது.

இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா, 24 பந்துகளைச் சந்தித்து 20 ரன்களை மட்டுமே எடுத்தார். இதையடுத்து, அவர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருவதாக ரசிகர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, வெறும் 133 ரன்களை (1, 3, 25, 10, 18, 23, 12, 21, 20) மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் எந்தப் போட்டியிலும் 30 ரன்களைத் தாண்டவில்லை. அதிகபட்சமாக ஒரு போட்டியில் ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால்தான் அவரது பேட்டிங் குறித்து விமர்சனம் தொடர்ந்து எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பேட்டி ஒன்றில், ”சென்னை அணி சார்பில் நான் 7வது வீரராக பேட்டிங்கில் களமிறங்கும்போது, ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து ‘மஹி பாய்.. மஹி பாய்..(தோனி)’ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விடுவதை நான் கேட்கிறேன். ஒருவேளை தோனிக்கு முன்னதாக நான் களமிறங்கினால், எனது விக்கெட்டுக்காக (அவுட்) காத்திருப்பார்கள். எனினும், அணி வெற்றிபெற்றால் போதும், நான் மகிழ்ச்சி அடைவேன்” என ஜடேஜா நகைச்சுவையுடன் கூறியிருந்தார். இதனை நகைச்சுவையாக அவர் தெரிவித்தாலும், நெட்டிசன் ஒருவர், வேதனையை மனதில் மறைத்து வைத்துக்கொண்டு ஜடேஜா புன்னகையுடன் அவ்வாறு கூறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். மேலும் சொந்த அணி ரசிகர்கள் ஆதரவு தெரிவிக்காமல், விக்கெட் விழுவதற்காக காத்திருப்பதாகக் கூறப்படுவது மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானது என்றும், சென்னை அணியின் இளவரசர் நீங்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட்டை ஜடேஜாவும் லைக் செய்திருந்தார். மேலும், இது விவாதப் பொருளாகவும் மாறியது.

தற்போதும் இந்தப் பிரச்னை விவகாரம் எடுத்துள்ளது என்கின்றனர், ரசிகர்கள். இதுகுறித்து அவர்கள், “இன்றைய போட்டியில் ஜடேஜா வெறும் 20 ரன்களில் வெளியேறியபோது, ’தோனி’ என்கிற சத்தம் விண்ணையே அதிரச் செய்தது. இதுவும், ஜடேஜா காதில் விழுந்திருக்கும். மனதளவில் வருத்தப்படும் ஜடேஜா, தொடர்ந்து இப்படி ஆடினால், அதுவும் அதிக பந்துகளைச் சந்தித்து குறைந்த ரன்களை எடுத்தால், யார்தான் பொறுத்துக் கொள்வார்கள்? சென்னை அணியைப் பொறுத்தவரை ஷிவம் துபே, கான்வே, ரஹானே, கெய்க்வாட் என யார் அவுட் ஆகிப் போனாலும் இப்படிச் சொல்வதில்லையே? ஏனெனில், அவர்கள் ஒரு போட்டியில் ரன் அடிக்காவிட்டாலும் அடுத்த போட்டியில் அதை நிவர்த்திச் செய்துவிடுகிறார்கள். ஆனால், ஜடேஜா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். அதுவும் இந்த சீசனில் இப்படி ரன் எடுத்தால், யார்தான் குறை சொல்ல மாட்டார்கள்” என மீண்டும் ஜடேஜாவை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com