IPL 2025 | ஈடன் கார்டன் மைதானத்தில் ஹர்ஷா போக்லே, சைமன் டவுல் நுழையத் தடையா? காரணம் இதுதான்!
இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர்களாகச் செயல்பட்டு வரும் ஹர்ஷா போக்லே மற்றும் முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் ஆகிய இருவரையும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நுழைய அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் (CAB) பிசிசிஐக்கு கடிதம் எழுதியுள்ளது.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த நிலையில் அந்தப் போட்டியின்போது, ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் ஆகியோர் வர்ணனை செய்வதற்காக வந்தால் மைதானத்திற்குள் அனுமதிக்க முடியாது என பெங்கால் கிரிக்கெட் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது.
ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியை விமர்சித்து அவர்கள் இருவரும் பேசியதுதான் இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது. 2025 ஐபிஎல் தொடரில் துவக்கத்தில் இருந்தே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், ஈடன் கார்டன் மைதானத்தின் பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு இருந்தன. இந்த விவகாரம் குறித்து வர்ணனையின் போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் சுஜன் முகர்ஜியை நேரடியாக விமர்சித்திருந்தனர். அது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தை கோபம் அடைய செய்து இருக்கிறது.
இதுகுறித்து பெங்கால் கிரிக்கெட் சங்கம் பிசிசிஐக்கு அளித்திருந்த விளக்கத்தில், ஐபிஎல் விதிமுறைகளின்படிதான் தாங்கள் பிட்சுகளைத் தயாரித்து வருவதாகவும், எந்த அணிக்கும் பிட்ச் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கான உரிமை இல்லை என விதிமுறைகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதைத்தொடர்ந்து, தற்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் தங்களின் மைதான பிட்ச் பராமரிப்பாளரை விமர்சித்ததால் அவர்களை அனுமதிக்க முடியாது என பிசிசிஐக்குக் கடிதம் எழுதி இருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டியின்போது ஹர்ஷா போக்லே மற்றும் சைமன் டவுல் ஈடன் கார்டன் மைதானத்திற்குச் செல்லமாட்டார்கள் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஐபிஎல் வரலாற்றிலேயே இந்த ஆண்டில்தான் ஒவ்வோர் அணியும் தங்களின் சொந்த மைதானங்களில் அதிக தோல்வியைச் சந்தித்து வருகின்றன. இதையடுத்து, அவ்வணிகளைச் சேர்ந்தவர்கள், ’தங்களுக்கு விருப்பமான பிட்ச் உருவாக்கப்படவில்லை’ என்கிற குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.