'ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்' - இங்கிலாந்து ஊடகங்களை வறுத்தெடுத்த ஹர்ஷா போக்லே!

'ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்' - இங்கிலாந்து ஊடகங்களை வறுத்தெடுத்த ஹர்ஷா போக்லே!
'ஆதிக்க மனப்பான்மையில் இருக்கிறீர்கள்' - இங்கிலாந்து ஊடகங்களை வறுத்தெடுத்த ஹர்ஷா போக்லே!

''தீப்தி சர்மா மீது தொடர்ந்து விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே.

இந்தியா - இங்கிலாந்து மகளிா் அணிகள் இடையே லாா்ட்ஸில் நடைபெற்ற கடைசி ஒருநாள் ஆட்டத்தில் வெற்றியை நோக்கி இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது, அந்த அணியின் பேட்ஸ்மேன் சாா்லோட் டீனை மன்கட் முறையில் அவுட்டாக்கினாா் தீப்தி சா்மா. இதனால் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்தது. 'ஜென்டில்மேன் கேம்' என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் மன்கட் முறையில் அவுட் செய்வது சா்ச்சையை ஏற்படுத்துகிறது. எனினும் தீப்தி சா்மா விதிகளுக்குட்பட்டே சாா்லோட்டை அவுட்டாக்கினாா் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தீப்தி சர்மா மீது தொடர்ந்து வரும் விமர்சனங்கள் குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கூறுகையில், ''இங்கிலாந்து ஊடகங்கள் தொடர்ந்து மான்கட் விவகாரத்தில்  தீப்தி சா்மா குறித்து கேள்வி எழுப்பி வருவது வேதனை அளிக்கிறது. தீப்தி சர்மா ஐசிசி விதியின்படியே நடந்திருக்கிறார். சார்லி டீன் தொடர்ந்து அந்த தவறை செய்து வந்தது மூலம் அவருக்கு சாதகமாக அமைந்தது. இங்கிலாந்து உடைய கலாச்சாரமே அதுதான். உலகை ஆண்ட ஆணவம் இன்னும் அவர்களுக்கு இருக்கிறது. இங்கிலாந்து எதை தவறு என்று சொல்கிறார்களோ நாமும் அதை தவறு என்று ஒப்புக்கொள்ள வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையை இன்னும் இங்கிலாந்து கடைப்பிடித்து வருகிறது.

இங்கிலாந்தும் ஆஸ்திரேலியாவும் செயல்படுத்தும் ஒன்றை மற்ற கிரிக்கெட் நாடுகளும் மதிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். இதேபோன்று ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அது மோசமான ஆடுகளம் என்றும், வேக பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் நல்ல ஆடுகளம் என்றும் இங்கிலாந்து நினைக்கிறது. அதே கலாச்சாரத்தை நாமும் கடைப்பிடித்து வருகிறோம். பந்துவீச்சாளர்கள் முனையில் உள்ள பேட்ஸ்மனை ரன் அவுட் ஆக்க கூடாது என்று உலக நாடுகளுக்கு இங்கிலாந்து சொல்கிறது. அப்படி அவுட் செய்யும் நபர்களை இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஆனால் இனியும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

உங்களுடைய கருத்துக்களை மற்றவர்களிடம் திணிக்காதீர்கள்.  ஐசிசியின் விதிப்படி பந்துவீச்சாளர் முனையில் இருக்கும் பேட்ஸ்மேன் கோட்டுக்கு உள்ளே இருக்க வேண்டும். நீங்கள் அதை மதித்தால் விளையாட்டு சிறப்பாக இருக்கும். ஆனால் நீங்கள் தொடர்ந்து மற்றவர்களை குறை சொல்லிக் கொண்டு இருந்தீர்கள் என்றால் உங்கள் மீதும் கேள்விகள் வீசப்படும். தொடர்ந்து தீப்தி சர்மா மீது விமர்சனம் வைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”பும்ரா இல்லாததால் டெத்ஓவர் பந்துவீச்சு இந்தியாவுக்கு எளிதானதாக இருக்காது”- சபா கரீம்


Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com