csk vs kkr
csk vs kkrpt web

ஏன் தோனி? எம்மாதிரியான பேட்டிங் ஆர்டர் இது? எளிதான வெற்றியை போராடிப் பெற்ற CSK

கொல்கத்தா நைட் ரைடஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Published on

மீண்டும் சுழல் ஜாம்பவான்கள்

கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திலிருந்த கொல்கத்தா நைட் ரைடஸ்.... தொடர்ச்சியாக 4 போட்டிகளில் தோற்று இழப்பதற்கு எதுவுமில்லை எனும் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்.... இந்த இரு அணிகளும் மோதினால் என்ன நடக்கும்? ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த போட்டியில் என்ன நடந்தது? முழுமையாகப் பார்க்கலாம்....

ரகானே, தோனி
ரகானே, தோனிIPL

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் வழக்கமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவக்கூடிய வகையிலிருக்கும்.. சுழற்பந்து வீச்சாளர்கள் இம்மைதானத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்த நிகழ்வுகள் மிகவும் குறைவு. ஆனால், நேற்று நடந்த போட்டி சற்று மாறுபட்டு அமைந்திருந்தது. வானிலை காரணமாகவும், ஈரப்பதத்தின் காரணமாகவும் ஆடுகளம் சுழலுக்கு ஏற்ற வகையில் அமைந்திருந்தது. அதாவது tacky conditions என்பார்களே.. அப்படி. எனவே, இரு அணிகளும் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தது. சிஎஸ்கே அணிக்காக அஸ்வினும், கேகேஆர் அணிக்காக மொயீன் அலியும் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டனர்.

பேட்டிங் செய்ததற்கான காரணங்கள்

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற கேகேஆர் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். இதற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம்.

1. ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த கடைசி ஐந்து போட்டிகளில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றிருந்தது.

2. கொல்கத்தா அணியும் தான் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் முதலில் பேட் செய்தே வெற்றி பெற்றிருந்தது.

3. சென்னை அணி 180 ரன்கள் எனும் இலக்கை செய்து வெற்றி பெற்று 5 வருடங்களுக்கும் மேல் ஆகின்றது.

இவையனைத்தையும் மனதில் வைத்தே ரஹானே பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால், நாம் நினைத்தது எல்லாம் நடந்துவிடுகிறதா என்ன?

கேகேஆர் தொடக்க ஆட்டக்காரர்கள்
கேகேஆர் தொடக்க ஆட்டக்காரர்கள்IPL

இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு பெரும் தலைவலியாக பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது தொடக்க ஆட்டக்காரர்களின் செயல்பாடுகள். டிகாக் தொடர்ச்சியாக சொதப்புகிறார் என்று ரஹ்மானுல்லா குர்பாஸை களமிறக்கினால் அவரும் ஏறத்தாழ டிகாக் போலவே ஆடிக்கொண்டிருக்கிறார். இன்றும் அன்ஷுல் காம்போஜ் பந்துவீச்சில் 11 ரன்களில் வெளியேறி கேகேஆர் அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார். அவருக்குப் பதிலாக லவ்னித் சிசோடியாவைக் களமிறக்கலாம் என்பது பல கிரிக்கெட்டர்களின் பரிந்துரைகள். அது குறித்து சமீபத்தில் பேசியிருந்த கேப்டன் ரகானே, ‘அவருக்கான வாய்ப்பு எங்கேயும் சென்று விடாது.. சரியான நேரத்தில் பயன்படுத்தப்படுவார்’ எனும் ரீதியில் பேசியிருந்தார். அந்த சரியான சூழல் இதுக்கு மேலும் வரவேண்டுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ரகானேக்கு எதிரானதிட்டம்

தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறிவிடுகிறார்கள்; மிடில் ஆர்டரோ சொல்லிக்கொள்ளும் படியான ஃபார்மில் இல்லை; நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற இக்கட்டான இடத்தில்தான் ஒவ்வொரு போட்டியிலும் ரஹானே களமிறங்க வேண்டியிருக்கிறது. மிக முக்கியமாக, அவர்தான் கொல்கத்தா அணிக்காக இந்த சீசனில் அதிக ரன்களை அடித்த வீரரும் கூட. இன்றும் இக்கட்டான இடத்தில் களமிறங்கி நிதானமாகத்தான் ஆட்டத்தை ஆரம்பித்தார். இருந்தபோதும், மறுமுனையில் நரைன் அதிரடி காட்ட அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. பவர் ப்ளே முடிவில் அணியின் ஸ்கோர் 67ஐத் தொட்டிருந்தது. இதற்கிடையே 15 ரன்களில் ரஹானே கொடுத்த கேட்சை வேறு, வழக்கம்போல பதிரானா கோட்டைவிட்டிருந்தார்.

ரகானே
ரகானேIPL

இத்தகைய இக்கட்டான சூழலிலும், சென்னை அணிக்கு எதுவும் கைமீறிச் சென்றுவிடவில்லை. ரஹானே பேட்டிங் செய்கிறார்.. கைவசமோ மூன்று ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்.. காத்திருப்பானேன்? திட்டத்தை செயல்படுத்தி விட வேண்டியதுதானே? கிட்டத்தட்ட ரகானே அவுட் ஆகும் வரை மூன்று ஸ்பின்னர்களையும் கொண்டு மாற்றி மாற்றித் தாக்கினார் தோனி. அவரது திட்டம் கைமேல் பலனைக் கொடுத்தது. மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணி மூன்று விக்கெட்களை இழந்து 57 ரன்களை மட்டுமே எடுத்தது. பவர் ப்ளேவில் 11.13 ஆக இருந்த ரன்ரேட் மிடில் ஓவர்களில் 6.33 ஆகக் குறைந்தது. நரைன் மற்றும் அங்குரிஷ் ரகுவன்ஷியை நூர் அகமது வெளியேற்ற ரகானேவை ஜடேஜா வெளியேற்றினார்.

மீண்டும் மனீஷ் பாண்டே

இதற்கிடையே நரைனை ஸ்டெம்பிங் செய்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றியில் 200 டிஸ்மிஸல்கள் நிகழ்த்திய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். ரகானேவை வெளியேற்றியதின் மூலம் சிஎஸ்கே அணிக்காக அதிகமாக விக்கெட்களை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையை ஜடேஜா தட்டிச் சென்றுள்ளார். இதுவரை அவர் 141 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

ரஸல்
ரஸல்IPL

சரி, சாதனைகள் இருக்கட்டும்.. ஆட்டத்திற்குப் போவோமே.. கொல்கத்தா அணியின் துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் இன்று அணியில் இடம்பெறவில்லை. இடது கையில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக வெங்கடேஷ் ஐயர் விளையாடாத நிலையில், அவருக்குப் பதிலாக மனீஷ் பாண்டே களமிறங்கினார். எக்கச்சக்க அனுபவங்களுடன் களத்திற்கு வந்த அவர், மிக மெதுவாகவே ரன்களை சேர்த்துக் கொண்டிருந்தார். இடையிடையே ரஸல் அதிரடி காட்ட கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 179 ரன்களை எடுத்தது.

புது வரவு உர்வில் படேல்

‘நீங்க 250 ரன் அடிச்சாலும் இப்போ இருக்குற பேட்டிங் லைன் அப்புக்கு நாங்க கண்டிப்பா ஜெயிச்சிடுவோம்’ என சிஎஸ்கே ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க ‘இருங்க பாய்’ என அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தனர் சென்னை பேட்ஸ்மேன்கள். ஆயுஸ் மாத்ரே டக் அவுட், கான்வே டக் அவுட்.. அஸ்வின் 8, ஜடேஜா 19 என அடுத்தடுத்து வீழ்ந்தனர். சிஎஸ்கேவிற்குப் புது வரவான உர்வில் படேல் கேகேஆர் பந்து வீச்சாளர்களை போட்டு விளாசியெடுத்தாலும் 11 பந்துகளில் 33 ரன்களை மட்டுமே எடுத்து அவரும் விரைவில் வெளியேறினார். உர்வில் defence நன்றாக ஆடக் கூடிய ப்ளேயர்தான் என்பதால், தனது defenceஸையும் aggressionயும் சரி விகிதத்தில் கலந்தால் longer இன்னிங்ஸ் ஆடக்கூடிய இம்பேக்ட் வீரர் ரெடி.. இப்படி சென்னை அணி பவர் ப்ளேவுக்குள்ளேயே 60 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்தது. கிட்டத்தட்ட பாதி அணி காலி.

ஜடேஜா
ஜடேஜாIPL

இப்போது வரை தெரியவில்லை அஸ்வின் ஏன் நான்காவது பேட்ஸ்மேனாக களத்திற்கு வந்தார் என்பது.. சிஎஸ்கேவின் மெயின் பவர் ஹிட்டர்கள் என்றால் அது டெவால்ட் ப்ரெவிஸும், ஷிவம் துபேவும். ப்ரேவிஸ் எப்போது, எந்த இடத்தில் வந்தாலும் அணிக்கான தனது பங்கை சிறப்பாக செய்துவிடுகிறார். ஆனால், துபே சமீப காலங்களில் சிரமப்படுகிறார். அப்படியிருக்கையில், அவரை இன்னும் அதிகமான பந்துகள் ஆட வைப்பதுதானே சரியாக இருக்கும். எப்போது பார்த்தாலும், கடினமான சூழல்களில் மட்டுமே களத்திற்கு வரும்படி இருக்கிறது துபேவின் நிலைமை.. அவரும் சூழலுக்கு ஏற்றார்போல், தனது வழக்கமான ஆட்டத்தை ஆடாமல் பந்துக்கு ஒரு ரன் என ஆடி வருகிறார்.. இப்படி ஒரு பந்துக்கு ஒரு ரன் என்னும் வேலையை ஜடேஜாவும் அஸ்வினும்தானே செய்ய வேண்டும்? சிஎஸ்கே பேட்டிங் லைன் அப்பில் என்ன நடக்கிறதோ? எல்லாம் தோனிக்கே வெளிச்சம்..

போராடி வென்ற சிஎஸ்கே

சரி, மீண்டும் போட்டிக்குத் திரும்பலாமே? 5 விக்கெட்களை இழந்து ரன் அடிக்க சிரமப்பட்டுக் கொண்டிருந்த சென்னை அணியை மீட்க வந்த மீட்பர்போல் பந்து வீச வந்தார் வைபவ் அரோரா... 11 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே லாங் ஆஃப் திசையில் ப்ரேவிஸ் சிக்ஸ் அடித்தார். எல்லையில் நின்று கொண்டிருந்த ரகுவன்ஷி தவறாகக் கணித்துவிட பந்து சிக்சருக்குச் சென்றது. தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள், இரு சிக்சர்கள் இறுதிப் பந்தில் மீண்டும் ஒரு பவுண்டரி என வைபவ் அரோராவை வாட்டி வதைத்தார் ப்ரேவிஸ். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் கிடைத்து சென்னை அணிக்கு வெற்றி உறுதி எனும் நிலைக்குச் சென்றுவிட்டது. ஆனால், 52 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரேவிஸ் வெளியேற தோனி களமிறங்கினார்.

துபே
துபேIPL

துபே மிக நிதானமாக ஆட, தோனி சற்று நேரமெடுத்துக்கொண்டார். ரன் ஆமைவேகத்தில் சென்றது. ஆனாலும் இருவரும் இணைந்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்து விடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், துபே 45 ரன்களுக்கு வெளியேறினார். இக்கட்டான நிலையில் களத்திற்கு வந்து, சூழலை நிதானித்து மிகச்சிறப்பாகவே செயல்பட்டுள்ளார் துபே. இறுதி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்தில் தோனி சிக்ஸ் அடிக்க 19.4 ஓவர்களில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி தோற்றது ஏற்கனவே மங்கிப் போய் இருந்த அவர்களது ப்ளேஆஃப் வாய்ப்பை மேலும் மங்கச் செய்துள்ளது.

போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்

இந்த போட்டியில் இரு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். கொல்கத்தா கேப்டன் ரஹானே ஐபிஎல்லில் 5000 ரன்களைக் கடந்த 7ஆவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

வருண் சக்கரவர்த்தி
வருண் சக்கரவர்த்திIPL

கேகேஆர் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அதிவேகமாக 100 விக்கெட்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சாஹல் 83 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய நிலையில், தற்போது வருண் சக்கரவர்த்தியும் 83 போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி 100 முறை நாட் அவுட்டாக இருந்த ப்ளேயர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.

கிட்டத்தட்ட 2019 ஆம் ஆண்டுக்குப் பின் சிஎஸ்கே அணி 180 எனும் இலக்கை வெற்றிகரமாக எட்டிப்பிடித்துள்ளது. போட்டி முடிந்து பேசிய தோனி, “மறந்துவிடாதீர்கள் எனக்கு 43 வயதாகிறது. நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். இதுதான் என்னுடைய கடைசி சீசனா என்பது ரசிகர்களுக்குத் தெரியாது. நான் வருடத்தில் 2 மாதங்கள் மட்டுமே விளையாடுகிறேன். ஐபிஎல் முடிந்துவிட்டால், அடுத்த 6 முதல் 8 மாதங்களுக்கு உழைக்க வேண்டும். அப்போதுதான் என் உடல் இம்மாதிரியான அழுத்தமான சூழல்களை தாங்குமா என்பது தெரியவரும். ஓய்வு குறித்து இப்போது முடிவு செய்ய எதுவுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். தோனி அடுத்தாண்டும் விளையாடி, அவரது தலைமையில் மீண்டும் கோப்பை வென்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com