
கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்து விளையாடி வருகிறார், ஷிவம் துபே. நடப்பு சீசனில் 3 அரை சதங்களை அடித்தும் ஷிவம் துபே, ஐபிஎல்லில், பவுண்டரிகளைவிட, அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 5வது இடம்பிடித்து உள்ளார்.
இந்தப் பட்டியலில் மும்பை அணிக்காக விளையாண்ட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பொல்லார்ட் முதலிடத்தில் உள்ளார். அவர், 223 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதேநேரத்தில், அவர் 218 பவுண்டரிகள் மட்டும்தான் அடித்துள்ளார். தவிர, நடப்பு சீசனில் அவர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அடுத்த 3 இடங்களிலும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களே இடம்பிடித்துள்ளனர்.
2வது இடத்தில் ரசூல் 186 சிக்ஸர்களுடனும் (146 பவுண்டரிகள்), 3வது இடத்தில் பூரன் 81 சிக்ஸர்களுடனும் (70 பவுண்டரிகள்), ஹெட்மயர் 67 சிக்ஸர்களுடனும் (62 பவுண்டரிகள்) உள்ளனர். சென்னை வீரர் ஷிவம் துபே 59 சிக்ஸர்களுடன் (57 பவுண்டரிகள்) 5வது இடத்தைப் பகிர்ந்துள்ளார். இன்றையப் போட்டியில் ஷிவம் துபே, விளையாண்டதன் மூலம் இந்த சிக்ஸ் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் 9 போட்டிகளில் விளையாடி, இதுவரை 264 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 3 அரைசதங்களும் அடக்கம். கடந்த காலங்களில் ஷிவம் துபே, பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளில் இடம்பெற்று விளையாடி இருக்கிறார்.