RCBVMI | கேட்சைத் தவறவிட்ட வீரர்கள்.. கோபத்தில் தொப்பியை வீசிய விராட் கோலி!
நடப்பாண்டு ஐபிஎல் தொடர், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அணி வீரர்கள் கேட்சைப் பிடிக்கத் தவறியதால் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரரும் ரன் மெஷின் என அழைக்கப்படுபவருமான விராட் கோலி, கேட்சைத் தவறவிட்ட விரக்தியில் தன் தலை மீது வைத்திருந்த தொப்பியைத் தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் அணிகளுக்கிடையே தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி, நேற்று (ஏப்.7) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக மும்பை அணி பேட்டிங்கின்போது 12-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் தூக்கி அடித்த பந்தை யாஷ் தயாள் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகிய இருவரும் பிடிக்க முயன்றனர். அப்போது இருவரும் மோதிக்கொண்டதால் கேட்சை தவறவிட்டனர். இதனால் கடுப்பான விராட் கோலி தொப்பியை கீழே தூக்கி எறிந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 67 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது