IPL சூதாட்ட சர்ச்சை | 10 அணி வீரர்களுக்கும் பிசிசிஐ அலெர்ட்.. கண்காணிக்கும் குழு!
இந்தியாவில் நடைபெற்று வரும் 18வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. மறுபுறம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டும் விளையாட்டாக இது உள்ளது. அதேநேரத்தில், இந்த ஐபிஎல் தொடரை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு சூதாட்டம் நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில், சூதாட்ட கும்பலுடன் தொடர்புள்ள சில தொழிலதிபர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் ரசிகர்கள் போன்று அறிமுகமாகி, அவர்களுக்கு பணம் அல்லது பரிசு வழங்கி நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் போட்டி தொடர்பான சில தகவல்களை பெற்று சூதாட்டக்காரர்களுக்கு அதை வழங்கி விடுவார்கள். இதுபோன்ற நபர்களிடம் வீரர்கள், அணி உரிமையாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப் உள்ளிட்டோர் சிக்கிவிடக் கூடாது என்பதில் பிசிசிஐ கவனமாக உள்ளது.
அந்த வகையில், சூதாட்ட கும்பலுடன் தொடர்புடைய ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், வீரர்களை அணுக முயற்சி செய்வதாக ஊழல் தடுப்புப் பாதுகாப்புக் குழு {Anti-Corruption Security Unit (ACSU)} தெரிவித்துள்ளது. இந்த குழு, இதுபோன்ற சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது வீரர்களை அணுகுகின்றனரா என ரகசியமாக கண்காணிக்கக்கூடியது. இந்தக் குழுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து வீரர்களுக்கு பிசிசிஐ அறிவுரை வழங்கியுள்ளது.
வீரர்கள் மற்றும் அணியில் உள்ள அனைவரும் ரசிகர்கள் போர்வையில் தங்களை தனி நபர் யாராவது அணுகினால் உஷாராக இருக்க வேண்டும் எனவும், அதுதொடர்பாக உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், மேலும் அவர்கள் வீரர்களுக்கு மட்டுமல்ல, உங்களுடைய குடும்பத்தினருக்கும் பரிசு போன்ற பொருட்கள் கொடுத்து வலை விரிக்கலாம். இதனால் உஷாராக இருங்கள்” என அது எச்சரித்துள்ளது.