பார்டர் - கவாஸ்கர் டிராபி தோல்வி.. 3 பேரை அதிரடியாய் நீக்கும் பிசிசிஐ.. பின்னணியில் இருப்பது என்ன?
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டிராபியை இந்திய அணி இழந்ததைத் தொடர்ந்து, அவ்வணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து அதிருப்தி அடைந்த பிசிசிஐ 10 புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. எனினும், அதுதொடர்பாக அப்போது டிரஸ்ஸிங் ரூமில் நடைபெற்ற செய்திகள் தற்போது கசிந்து வருவது பிசிசிஐக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்திய அணியிலிருந்து மூன்று பேரை பிசிசிஐ நீக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியில் பிரபல பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பதவியேற்று எட்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில், அவரைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், மூன்று ஆண்டுகளாக அணியில் இருக்கும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் மற்றும் பயிற்சியாளர் சோஹம் தேசாய் ஆகியோரும் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அபிஷேக் நாயர் மற்றும் திலீப்பிற்கு பதிலாக புதிய நியமனங்கள் எதுவும் செய்யப்படாது என்று அறிக்கை தெரிவித்துள்ளது. உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவான் சிதான்ஷு கோடக் ஏற்கெனவே அணியில் இணைந்துள்ளார். அதேநேரத்தில் திலீப்க்கான இடத்தை, ரியான் டென் டோஷேட் மேற்பார்வையிடுவார் எனக் கூறப்படுகிறார். அதேபோல், சோஹம் தேசாய் இடத்தை அட்ரியன் லு ரூக்ஸ் ஏற்றுக்கொள்வார் எனத் தெரிகிறது.
முன்னதாக, "பயிற்சியாளருக்கும் வீரருக்கும் இடையிலான விவாதங்கள் டிரஸ்ஸிங் அறையில் இருக்க வேண்டும். கடுமையான வார்த்தைகள் என்பது அவை வெறும் அறிவுரைகள்தான். நேர்மையானவர்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்வரை இந்திய கிரிக்கெட் பாதுகாப்பான கைகளில் இருக்கும். உங்களை டிரஸ்ஸிங் ரூமில் வைத்திருப்பது செயல்திறன் மட்டுமே. நேர்மை முக்கியம். அணிக்குத் தேவையானதை நீங்கள் விளையாட வேண்டும். ஒரு குழு விளையாட்டில் உங்கள் இயல்பான ஆட்டத்தை நீங்கள் இன்னும் விளையாடலாம்.
ஆனால் அணிக்கு நீங்கள் தேவைப்பட்டால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் விளையாட வேண்டும்” என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் தெரிவித்திருந்தார். அப்போது, ’கவுதம் காம்பீர் மாற்றப்பட வேண்டும், இடைக்கால கேப்டன் நியமிக்கப்பட வேண்டும்’ என டிரஸ்ஸிங் ரூமில் பேசியதாகத் தற்போது தகவல்கள் வெளியான நிலையிலேயே பிசிசிஐ இத்தகைய நடவடிக்கையை எடுக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.