‘முட்டாள்தனமானது... சுனில் கவாஸ்கரின் விமர்சனத்துக்கு நான் பதிலடி கொடுத்தேனா?’ - அம்பத்தி ராயுடு!

இம்பேக்ட் பிளேயராக ஒரு சில போட்டிகளில் களமிறங்கி விளையாடி வரும் சென்னை அணியின் அம்பத்தி ராயுடுவை, இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார். இதுகுறித்து அம்பத்தி ராயுடு விளக்கமளித்துள்ளார்.
அம்பத்தி ராயுடு,
அம்பத்தி ராயுடு, ட்விட்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 37-வது லீக் போட்டியில், சென்னை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. அதேவேளையில், ராஜஸ்தான் அணியுடனான தோல்வியை அடுத்து, முதலிடத்தில் இருந்த சென்னை அணி 10 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில், புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு கீழே இறங்கியுள்ளது.

அம்பத்தி ராயுடு,
ஐபிஎல் 2023: காயம் காரணமாக SRH அணியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் விலகல்!

இந்தப் போட்டியில், முதல் இன்னிங்சின்போது பவர் பிளேயில் ராஜஸ்தான் அணிக்கு அதிக ரன்களை சென்னை அணி பௌலர்கள் வாரி வழங்கியதும், இரண்டாவது இன்னிங்சின்போது ருதுராஜ் (47 ரன்கள்) மற்றும் ஷிவம் துபே (52 ரன்கள்) ஆகிய இருவரைத் தவிர, மற்ற சிஎஸ்கே பேட்டிங் வீரர்கள் நிலைத்து ஆடாததும் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதில் ஒருசிலப் போட்டிகளில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் அம்பத்தி ராயுடு 2 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி சென்றது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. ஆகாஷ் சிங்கிற்குப் பதிலாக அம்பத்தி ராயுடு களமிறங்கியிருந்தார்.

ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இம்பேக்ட் பிளேயர் விதிமுறை, ஒரு சில அணிகளுக்கு கைக்கொடுத்தாலும், ஒரு சில அணிகளுக்கு அதுவே தோல்வியை நோக்கி செல்ல காரணமாகவும் அமைந்து விடுகிறது. இந்நிலையில், நேற்று நடந்தப்போட்டியின்போது வர்ணணை செய்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், அம்பத்தி ராயுடு டக் அவுட் ஆனதும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

சுனில் கவாஸ்கர்
சுனில் கவாஸ்கர்

அதில், “முதலில் நீங்கள் பீல்டிங் செய்யவேண்டும். பீல்டிங் செய்யாமல் நேரடியாக பேட்டிங் செய்ய களத்திற்கு வந்து முதல் பந்தையே அதிரடியாக அடிக்கத் துவங்க முடியாது. இதே நிலைமையைதான் பிரித்வி ஷாவிடமும் (டெல்லி கேப்பிடல்ஸ் இம்பேக்ட் பிளேயர்) நாம் பார்க்கிறோம். பீல்டிங் செய்யவில்லையென்றால், ரன்கள் எடுக்க முடியாது. இரண்டாவது பந்திலேயே ராயுடு டக் அவுட்” என்றுக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாக பதிவு ஒன்றை பதிந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பதிவில், “விளையாட்டு மற்றும் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் என்பது ஒரு நிலையானப் பகுதி. நாம் நேர்மறையாக இருந்து, கடினமாக உழைக்கும்போது, விஷயங்கள் தானாகவே மாறும். முடிவுகள் எப்போதும் நமது முயற்சிகளின் அளவீடு அல்ல. ஆகவே, எப்போதும் புன்னகையுடன் இருங்கள். செயல்முறைகளை அனுபவித்து செய்யுங்கள்” என்று தனது சக வீரர்களுடன் சிரித்து மகிழும் புகைப்படத்தையும் சேர்த்து அவர் பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்தப் பதிவுக்கு கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதையடுத்து ட்விட்டரிலும், ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வந்தனர். இந்தநிலையில், அம்பத்தி ராயுடு ட்விட்டரில் மீண்டும் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அதில், “என்ன ஒரு முட்டாள்தனம்... மதிப்புமிக்கவரான கவாஸ்கரின் கருத்துகளுக்கும், எனது ட்வீட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. எனது பீல்டிங் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் மதிக்கத்தக்கவை.. பீல்டிங் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை ஒரு வீரர் முடிவு செய்வதில்லை” என்றுக் குறிப்பிட்டுள்ளார்.

காலையில், சுனில் கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில், மாலையில் வேறு ஒரு ட்வீட் மூலம் அம்பத்தி ராயுடு விளக்கம் அளித்துள்ளார். சென்னை அணி இதுவரை 8 லீக் போட்டிகளில் ஆடியுள்ளது. இதில் கொல்கத்தா போட்டியில் பேட்டிங்கில் களமிறங்காத அம்பத்தி ராயுடு, மீதம் 7 லீக் ஆட்டங்களில் விளையாடி 83 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com