டி-20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!

தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!
டி-20 போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி தொடரை கைப்பற்றிய ஆப்கானிஸ்தான்!

ஷார்ஜாவில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் விததியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது.

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்டு டி-20 தொடர் ஷார்ஜாவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 92 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதையடுத்து எளிதான ஸ்கோரை சேஸ் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 17.5 ஓவரில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 1:0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில், ஆப்கானிஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் அணி விக்கெட்களை இழந்தது. சிறப்பாக பந்து வீசிய ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தான் அணியின் ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்தது. இறுதியில் 20 ஓவரில் 6 விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் அணி, 130 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணியின் இமாத் வாசிம் அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். ஷதாப் கான் 37 ரன்களும், முகமது ஹாரிஸ் 15 ரன்களும் எடுத்தனர்.

GLYN KIRK

இதைத் தொடர்ந்து 130 ரன்களை சேஸிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில், ரஹமத்துல்லா குர்பாஸ் 44 ரன்களும், இப்ராகிம் ஜத்ரன் 38 ரன்களும், நஜிபுல்லா ஜத்ரன் அவுட் ஆகாமல் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியதோடு பாகிஸ்தான் அணியை முதன்முறையாக பந்தாடியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் இந்த வெற்றி கூறும்போது, “இந்த அற்புதமான அணியை வழிநடத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த மைதானம் எப்போதும் 150 முதல் 160 ரன்கள் அடிக்கக் கூடிய இடம்தான். ஆனால், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆட்டம் அழுத்தமான ஆட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் அணியை 130 ரன்களுக்குள் சுருட்ட முடிந்தது” என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் ஷதாப் பேசுகையில், “இது ஒரு நல்ல ஸ்கோர். நாங்கள் மீண்டும் மீண்டும் போராடினோம். பேட்ஸ்மேன்களை நாம் ஆதரிக்க வேண்டும். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்கள் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் என இப்போதும் நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com