ஒரே ஓவரில் 45 ரன்கள்.. புதிய சாதனை படைத்த ஆப்கன் வீரர்!
கிரிக்கெட்டின் வடிவங்கள், ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தருவதுடன் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றும் வருகிறது. மேலும் புது வடிவ கிரிக்கெட்டால் பல்லாண்டுக் கால சாதனைகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன. இது தவிர, புதிய சாதனைகளும் படைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர், ஒரே ஓவரில் 45 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தில், ECS T10 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி, லண்டன் கவுண்டி கிரிக்கெட் கிளப் மற்றும் கில்ட்ஃபோர்டு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த லண்டன் கவுண்டி அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 226 ரன்கள் குவித்தது.
இவ்வணிக்காகக் களமிறங்கிய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் கானி 43 பந்துகளில்11 பவுண்டரி 17 சிக்சர்களுடன் 153 ரன்கள் குவித்து அசத்தினார். முன்னதாக அவர், வில் ஜர்னி வீசிய ஒரே ஓவரில் (8-வது ஓவர்) 45 ரன்கள் திரட்டி புதிய சாதனை படைத்தார். அந்த ஓவரில் 6+ நோ பால், 6, 4+ வைடு, 6, 4+ நோ பால், 6, 0, 6, 4 என ஸ்ட்ரைக் செய்து மொத்தம் 45 ரன்கள் எடுத்தார். அதாவது ஒரு வைடு, 2 நோ பால் உள்ளிட்ட ரன்களுடனும் 5 சிக்சர், 3 பவுண்டரிகளுடனும் இந்த ரன் வந்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு ஓவரில் 43 ரன்கள் எடுத்ததே ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் அதிகபட்சமாக இருந்தது. தற்போது கெய்க்வாட்டின் சாதனையை தகர்த்து உஸ்மான் கானி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
29 வயதான உஸ்மான் கானி ஆப்கானிஸ்தானுக்காக 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 2014இல் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் 2023இல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது கானி ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.