ENGvWI| ஸ்டூவர்ட் பிராட் வரிசையில் இணைந்த அடில் ரஷீத்.. ஒரே ஓவரில் 5 சிக்சர்கள்..!
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 போட்டிகளையும் வென்ற இங்கிலாந்து அணி 3-0 என தொடரை வென்று அசத்தியது.
அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விட்டுக்கொடுத்த அடில் ரஷீத்!
ஒருநாள் தொடரை இழந்தபிறகு, முதல் டி20 போட்டியிலும் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது டி20 போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் களம்கண்டது. கவுண்டி மைதானத்தில் தொடங்கிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக களமிறங்கிய லெவிஸ் கோல்டன் டக்கில் வெளியேறினாலும், 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சார்லஸ் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் 7 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் என விளாசி அதிரடியாகவும், பொறுப்பாகவும் விளையாடினர். சார்லஸ் 47 ரன்களும், சாய் ஹோப் 49 ரன்களும் அடித்து வெளியேற, அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணி கம்பேக் கொடுத்தது.
ஆனால் 5வது வீரராக களத்திற்கு வந்த ரோவ்மன் பவல் 15 பந்தில் 34 ரன்கள் அடித்து ரன்களை எடுத்துவர, அடில் ரஷீத் வீசிய 19வது ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய ஹோல்டர் மற்றும் ரொமாரியோ ஷெஃபர்ட் இருவரும் 31 ரன்களை விளாசினர். சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக விளையாடி அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த 2வது பவுலராக அடில் ரஷீத் மாறினார். முதலிடத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விட்டுக்கொடுத்த ஸ்டூவர்ட் பிராட் நீடிக்கிறார்.
கடைசிநேர அதிரடியால் 20 ஓவரில் 196 ரன்களை குவித்து அசத்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
டி20 தொடரை வென்று இங்கிலாந்து அசத்தல்!
197 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இங்கிலாந்து அணி 18.3 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றிபெற்றது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 47 ரன்களும், ஹாரி ப்ரூக் 34 ரன்களும் அடித்தனர்.
இரண்டு டி20 போட்டிகளை வென்ற இங்கிலாந்து அணி டி20 தொடரையும் வென்று அசத்தியுள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டியானது நாளை நடைபெறவிருக்கிறது.