ஓய்வுக்கு பிறகும் அதே மிரட்டல் அடி.. 210 ஸ்டிரைக்ரேட்டில் 63 ரன்கள் குவித்த AB DE! இந்தியா தோல்வி!
உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரின் இரண்டாவது சீசனானது கடந்த ஜுலை 18-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. இதில் இந்தியா சாம்பியன்ஸ், பாகிஸ்தான் சாம்பியன்ஸ், ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ், இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் முதலிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
நடப்பு தொடரில் ஏபிடி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்ல், யுவராஜ் சிங், பிரட் லீ, இயன் மோர்கன், ஷாஹித் அப்ரிடி முதலிய நட்சத்திர முன்னாள் வீரர்கள் பங்கேற்றுள்ளதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
ஓய்வுக்கு பிறகும் மிரட்டல் அடி..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 208 ரன்கள் குவித்தது. அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ், 30 பந்தில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 63 ரன்கள் விளாசி மிரட்டிவிட்டார்.
கடந்த 2021-ம் ஆண்டு ஐபிஎல் முதலிய அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விலகிய ஏபி டி வில்லியர்ஸ், 4 ஆண்டுகளுக்கு பிறகு WLC போட்டியில் கம்பேக் கொடுத்தார். ஆனால் தற்போதும் அதே மிரட்டலான பேட்டிங் மற்றும் அசத்தலான ஃபீல்டிங்கால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்.
மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 111 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. மழையின் காரணமாக இந்திய அணியின் இலக்கு மாற்றப்பட்டது. ஆட்டநாயகன் விருதை ஏபி டி வில்லியர்ஸ் தட்டிச்சென்றார்.