RCB வெற்றிக் கொண்டாட்டம் | பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் 10 பேர் உயிரிழந்த சோகம்!
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதை, அந்த அணி வீரர்களும், ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த வெற்றியின் ஒரு பகுதியாக, பெங்களூருவில் திறந்தவெளிப் பேருந்தில் அவ்வணி வீரர்கள் வெற்றி பேரணி நடத்தவுள்ளனர். அந்தப் பேரணி விதான சவுதாவில் தொடங்கி, சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ள நிலையில், அந்த மைதானத்தைச் சுற்றி ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதில் கேட்-6இல் ஏராளமான ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 10 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். காயமடைந்தவர்கள் சிவாஜிநகரில் உள்ள பவுரிங் மற்றும் லேடி கர்சன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், பேரிகார்டு விழுந்ததில் மூன்று பேரின் கால்கள் உடைந்துள்ளது. இதற்கிடையே, கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் போராடி வருகின்றனர்.