டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் சாதனையும், சறுக்கலும் - வெளியான ரிப்போர்ட் கார்டு!

டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் சாதனையும், சறுக்கலும் - வெளியான ரிப்போர்ட் கார்டு!
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர்களின் சாதனையும், சறுக்கலும் - வெளியான ரிப்போர்ட் கார்டு!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை பெறுத்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கலாம்.

நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் மிகவும் மோசமான தோல்வியை தழுவி வெளியேறியிருக்கின்றது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதையடுத்து பாகிஸ்தானும் இங்கிலாந்தும் இறுதிப்போட்டியில் மோத உள்ளன. இந்தியாவுக்கு இந்த முறையும் உலகக் கோப்பை கைகூடவில்லை. மீண்டும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை பெறுத்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கலாம்.

கேஎல் ராகுல்: 3/10 (மிகவும் மோசம்)

இந்த உலகக்கோப்பைத் தொடர் முழுவதுமே தொடக்க வீரர் கேஎல் ராகுலின் ஆட்டம் மிகவும் மந்தமாகவே இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 4 ரன்கள், நெதர்லாந்துக்கு எதிராக 9 ரன்கள், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 ரன்கள், வங்க தேசத்திற்கு எதிராக 50 ரன்கள் மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 51 ரன்கள் எடுத்திருந்தார். அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 5 ரன்கள் மட்டுமே எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். 6 போட்டிகளில் மொத்தம் 128 ரன்கள். இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டம் திருப்திகரமாக அமையவில்லை. அதற்கு ராகுலின் மோசமான ஆட்டமும் ஒரு காரணம். இதனால் கேஎல் ராகுல் பத்துக்கு வெறும் 3 மதிப்பெண்களே பெற்றுள்ளார்.

ரோகித் சர்மா: 3/10 (மிகவும் மோசம்)

இந்த தொடரில் ரோகித் சர்மாவின் ஆட்டமும் கேப்டன்ஷிப்பும் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. 6 போட்டிகளில் 116 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் அரையிறுதியில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்து உள்ளது. இதன்மூலம் ரோகித் சர்மாவின் அணித் தேர்வு, கள வியூகம் எதிர்பார்ப்புக்கு இணங்க இல்லை என்பது வெளிப்பட்டுள்ளது. அடுத்த டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா இருப்பாரா என்ற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதனால் அவர் பத்துக்கு 3  மதிப்பெண்களையே பெறுகிறார்.

விராட் கோலி: 8/10 (மிகவும் நன்று)

இந்த தொடரில் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்தது விராட் கோலிதான். முக்கியமாக நடப்பு டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்களை குவித்துள்ள பேட்ஸ்மேனாகவும் கோலி உள்ளார். 6 இன்னிங்ஸ் விளையாடி 296 ரன்கள் குவித்துள்ளார். இதில் 4 அரை சதங்கள் அடங்கும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களைக் கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். விராட் கோலி விளையாடிய அபாரமான ஆட்டம் தான் இந்தியாவை அரையிறுதி வரை அழைத்து வந்தது. இதனால் விராட் கோலி பத்துக்கு 8 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

சூர்யகுமார் யாதவ்: 9/10 (மிகவும் நன்று)

கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றோடு வெளியேறிய இந்திய அணி, இந்த முறை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றதற்கு சூர்யகுமார் யாதவும், விராட் கோலியுமே மிக முக்கிய காரணம். இதில் குறிப்பாக, ‘மிஸ்டர் 360 டிகிரி’ வீரர் என ரசிகர்களால் கொண்டாடப்படும் சூர்யகுமார் யாதவ், தனது முதல் டி20 உலகக் கோப்பையிலேயே அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். 6 போட்டிகளில் 239 ரன்கள்.

நடப்பாண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் படைத்திருக்கிறார். ஒவ்வொரு போட்டியிலும் தனித்துவமான ஷாட்களால் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தவர், இங்கிலாந்திடம் சரணடைந்தது மட்டுமே சிறிய ஏமாற்றம். இருப்பினும் பத்துக்கு 9 மதிப்பெண்கள் பெறுகிறார் சூர்யகுமார் யாதவ்.

ஹர்திக் பாண்டியா: 7/10 (நன்று)

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 33 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்த ஹர்திக் பாண்டியாவின் அதிரடி காரணமாகவே இந்திய அணியால் கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது. 6 போட்டிகளில் 128 ரன்கள், 8 விக்கெட்டுகளுடன் தன்னால் முடிந்த பங்களிப்பை அளித்துள்ள ஹர்திக் பாண்டியா பத்துக்கு 7 மதிப்பெண்கள் பெறுகிறார்.

தினேஷ் கார்த்திக்: 0/10 (மிகவும் மோசம்)

ஐபிஎல் 2022 தொடரில் அபாரமாக செயல்பட்டு கம்பேக் கொடுத்ததால் வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக், இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நன்றாகவே ஏமாற்றிவிட்டார். 4 போட்டிகளில் வெறும் 14 ரன்களை மட்டும் தான் அடித்துள்ளார். இதனால் தொடரின் கடைசி இரு போட்டிகளில் கழட்டி விடப்பட்டார். அணியில் இடம் பெற்றுள்ளதே அவருடைய ஃபினிஷர் ரோலுக்காக தான். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் கடைசி ஓவரில் ஃபினிஷிங் செய்யாமல் சொதப்பிய அவர், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் நன்கு செட்டில் ஆகியும் 5 (16) ரன்களில் அவுட்டாகி வெறுப்பேற்றினார். இதனால் தினேஷ் கார்த்திக்கு பத்துக்கு  பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்குவதே சரியானது.

ரவிச்சந்திரன் அஸ்வின்: 5/10 (பரவாயில்லை ரகம்)

இந்த தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிகழ்ந்த பெரும் தவறுகளில் ஒன்று, யுஸ்வேந்திர சஹாலுக்கு பதிலாக அஸ்வினுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தது. அஸ்வின் உலகத்தரமான ஸ்பின்னர் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலியாவில் எடுபடவில்லை என்பதே நிதர்சனம். இந்த தொடரில் அவர் மொத்தம் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். இதனால் அவர் பத்துக்கு 5 மதிப்பெண்களையே பெறுகிறார்.

அக்சர் படேல்: 3/10 (மோசம்)

ஜடேஜாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட அக்சர் படேல் தொடர் முழுவதும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 5 போட்டிகளில் வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங்கில் அவரது அதிகபட்ச ஸ்கோர் 7 ரன்கள். இதனால் அவர் பத்துக்கு 3 மதிப்பெண்களையே பெறுகிறார்.

புவனேஷ்வர் குமார்: 4/10 (சராசரிக்குக் கீழே)

அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளாரான புவனேஷ்வர் குமார் இந்த தொடரில் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார். பெரும்பாலான போட்டிகளில் ரன்களை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்ததே அவர் தந்த ஒரே ஆறுதல். இதனால் அவர் பத்துக்கு 4 மதிப்பெண்களையே பெறுகிறார்.  

முகமது ஷமி: 5/10 (பரவாயில்லை ரகம்)

இந்த தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்த முகமது ஷமி தனது முத்திரையை பதிக்க தவறிவிட்டார். 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகள். இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 3 ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த தொடரில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத முகமது ஷமி பத்துக்கு 5 மதிப்பெண்களையே பெறுகிறார்.

அர்ஷ்தீப் சிங்: 7/10 (நன்று)

இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கண்டறியப்பட்ட சிறந்த முகம் அர்ஷ்தீப் சிங் தான். 6 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனம் ஈர்த்துள்ள அர்ஷ்தீப் சிங் பத்துக்கு 7 மதிப்பெண்கள் பெறுகிறார்.

இதையும் படிக்கலாமே: தென்னாப்பிரிக்கா போல நாமும் 'சோக்கர்ஸா'? இந்திய அணி சறுக்கியதும் சொதப்பியதும் எங்கே?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com