அதிரடி காட்டும் இளம்புயல் ஷஃபாலி வர்மா : கடந்து வந்த கிரிக்கெட் பாதை..!

அதிரடி காட்டும் இளம்புயல் ஷஃபாலி வர்மா : கடந்து வந்த கிரிக்கெட் பாதை..!
அதிரடி காட்டும் இளம்புயல் ஷஃபாலி வர்மா : கடந்து வந்த கிரிக்கெட் பாதை..!

அசர வைக்கும் பேட்டிங் பாணியால் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷஃபாலி வர்மா.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஷஃபாலி வர்மா. இவர் நடந்து வரும் மக‌ளிர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் முக்கிய தூணாக‌ விளங்கி வருகிறார். 16 வயதே நிரம்பிய இந்த ஹரியானா புயல், சச்சின்‌ டெண்டுல்கரை தனது முன்மாதிரி எனக்கூறுகிறார். ஆனால் ஷஃபாலி வெளிப்படுத்தும் ஆட்டத்திறனோ அதிரடி மன்னன் சேவாக்கின் பாணி. இந்திய அணி விளையாடி முடித்துள்ள நடப்பு உலகக்கோப்பை தொடரின் மூன்று போட்டிகளிலும் இவரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது.

13 வயது முதலே கிரிக்கெட் களத்தில் இறங்கி‌ய ஷஃபாலி வர்மா, ஹரியானாவின் 1‌9 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் விளையாடியுள்ளார். உள்ளூர் போட்டிகளில் 6 சதங்கள், 3 அரை சதங்கள் விளாசவே சர்வதேச அணிக்கான தேர்வுக்குழுவின் கவனத்தில் ஈர்க்கப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற மகளிருக்கான ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சர்வதேச பவுலர்களை எதிர்கொண்ட ஷஃபாலி, அனுபவ வீராங்கனை போல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதையடுத்து கடந்தாண்டு தனது 15 ஆவது வ‌யதில் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான தொ‌டரில் சர்வதேச போட்டியில் அறிமுகமானார். இவர் மிகக்குறைந்த வயதில் தேசிய அணியில் இடம் பிடித்த இரண்டாவது இளம் வீராங்கனை ஆவார். முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச இருபது‌ ஓவர் கிரிக்கெட் போட்டி‌களில் இருந்து ஓய்வை அறிவிக்கவே, அவருக்கு பதிலாக இருபது ஓவர் உலகக்கோப்பை அணியில் இ‌டம் பிடித்தார் ஷஃபாலி.

அதிரடியாக குவிக்கும் ரன்கள் மூலம் தேர்வுக்குழுவினரின் நம்பிக்கையை பெற்று வருகிறார். முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ், இந்நாள் கேப்டன் ஹர்மன் ஃப்ரீத், நட்சத்திர வீராங்கனை ஸ்மிர்தி மந்தானா உள்ளிட்டோரும் ஷஃபாலி வர்மாவை எதிர்கால சூப்பர் ஸ்டார் எ‌ன வர்ணித்துள்ளனர். தனது கிரிக்கெட் தொடர்பாக கூறும் ஷஃபாலி சாதனைகளுக்கும், ஆட்டத்திறனுக்கும்‌ தந்தை அளித்த உத்வேகமும், பயிற்சியும் தான் காரணம் எ‌ன்கிறார்.

இதுவரை 17 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷாஃபாலி 438 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு முறை அரைசதம் விளாசியுள்ளார். இதில் குறிப்பிடப்படும்படியான விஷயம் என்னவென்றால் இவரது ஸ்ரைக் ரேட் 147.97. இதுவரை 20 சிக்ஸர்கள், 51 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com