1 வருடத்திற்கு பின் வழங்கப்பட்ட கோப்பை.. கால்பந்து உலகையே உலுக்கிய தீர்ப்பு! சர்ச்சையின் பின்னணி?
கடந்த 2025ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு நடத்திய (AFCON) ஆப்கான் கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு செனகல் அணியும் மொராக்கோ அணியும் தகுதி பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் 90-வது நிமிடம் முடியும் நேரத்தில் செனகல் வீரர் ஃபவுல் செய்ததாக மொராக்கோ அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கி நடுவர் ஜீன்-ஜாக்ஸ் நடாலா (Jean-Jacques Ndala) உத்தரவிட்டார்.
ஆனால் தாங்கள் எந்த ஃபவுலும் செய்யவில்லை என்று கூறி செனகல் வீரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதோடு இல்லாமல் பயிற்சியாளர் பாபே தியாவ் (Pape Thiaw) உத்தரவின் பேரில் செனகல் வீரர்கள் 14 நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியேறி (Walk-off) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பிற நடுவர்கள்,மூத்த வீரர்கள் மற்றும் செனகல் அணியின் நிர்வாகம் தலையிட்டு அந்த அணியை மீண்டும் போட்டியில் பங்கேற்க வைத்தனர். போட்டி தொடர்ந்த நிலையில், மொராக்கோ வீரர் பிராஹிம் டயஸ் (Brahim Diaz) அடித்த பெனால்டி வாய்ப்பை செனகல் கோல்கீப்பர் எட்வர்ட் மெண்டி (Edward Mendy ) தடுத்து நிறுத்தினார்.
தொடர்ந்து ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்ற நிலையில், இறுதிக்கட்டத்தில் செனகல் வீரர் பாபே குயே (Pape Gueye) கோல் அடித்தார். கடைசி வரை மொராக்கோ அணியால் கோல் அடிக்க முடியாத நிலையில், இறுதியில் செனகல் அணி 1-0 என்ற கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் போட்டி முடிந்த பின்னர் மொராக்கோ அணி மேல்முறையீடு செய்தது. அதன் படி இந்த வழக்கை விசாரித்த ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு நடுவரின் தீர்ப்பை எதிர்த்து சில நிமிடங்கள் செனகல் வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியேறியது சட்டவிரோதம் எனக் கூறி அந்த அணியை தகுதி நீக்கம் செய்து, இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவிய மொராக்கோ அணிக்கு கோப்பையை வழங்குவதாக அறிவித்தது.
விளையாட்டு உலகில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெரும்பாலான ஆப்ரிக்க அணிகள் மற்றும் மூத்த வீரர்கள் செனகல் அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இது குறித்து செனகல் அணி மேல்முறையீடு செய்தது.
அதில் 2025 ஆப்பிரிக்கக் கோப்பை (AFCON) கால்பந்துத் தொடரின் சாம்பியன் பட்டத்தை செனகல் அணிக்கு மீண்டும் வழங்கி, சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கால்பந்து உலகில் இது முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

