ராகுல் டிராவிட் பயிற்சியில் கலக்கிய இளம் வீரர்கள் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனால் மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் மாற்றங்கள் செய்யப்பட்டன. முரளி விஜய்க்கு பதிலாக ஷிகர் தவானும் குல்தீப் யாதவுக்குப் பதிலாக பும்ராவும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்குப் பதிலாக ரிஷாப் பன்டும் களமிறக்கப்பட்டனர்.
இந்தப் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய கேப்டன் விராத் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிருத்வி ஷா, காக்கிநாடாவைச் சேர்ந்த ஹனுமா விஹாரி சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் ராகுல் டிராவிட்டின் கண்டுபிடிப்பு.
(பிருத்வி ஷா)
இரண்டு பேருமே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் அசத்தியவர்கள். விஹாரி 2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் இருந்தவர். பிருத்வி ஷா கடந்த முறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்ட ன். சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த அங்கீகாரமற்ற டெஸ்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடர் ஆகியவற்றிலும் இருவரும் கவனிக்க வைத்தனர். ’தனது ஆட்டத்திறன் மேம்பட்டதற்கு ராகுல் டிராவிட்தான் காரணம்’ என்று தெரிவித்திருந்தார் பிருத்வி.
14 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள பிருத்வி, 1418 ரன்கள் குவித்திருக்கிறார். அவரது ஆவரேஜ் 56.72. இதில் ஏழு சதங்களும் அடக்கம்.
இதையும் படிங்க:விஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை!
தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிருத்வி ஷாவை, இந்திய அணியில் சேர்க்கலாம் என்றும் அவர் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அபாரமாக எதிர்கொண்டார் என்றும் ராகுல் டிராவிட் சர்டிபிகேட் கொடுத்திருந்தார் சமீபத்தில். அதோடு விஹாரியின் ஆட் டத்தையும் புகழ்ந்திருந்தார். 63 முதல் தர போட்டியில் விளையாடியுள்ள விஹாரி 15 சதங்களுடன் 5132 ரன்களை குவித்திருக்கிறார்.
(விஹாரி)
இருவரும் சமீபத்தில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சதம் அடித்து மிரட்டியதால், இப்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அணியில் ஏற்கனவே இடம் பெற்றிருக்கும் ரிஷப் பன்ட்டும் ராகுல் டிராவிட்டின் பயிற்சியில் உருவானவர்தான்.
‘இளம் வீரர்களை அபாரமாக உருவாக்குவது முக்கியம். ஏனென்றால் அடுத்து இந்திய அணியில் இடம் பிடிப்பவர்கள் அவர்கள்தான். அதனால் சர்வதே அணிகளுடன் அவர்களுக்கான போட்டியையும் அதிகமாக நடத்த வேண்டும்’ என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர், ராகுல் டிரா விட். அதனடிப்படையிலேயே, இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான தொடர், தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான தொடர் ஆகியவற்றில் இந்திய ஏ அணி பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.