டி20 உலகக் கோப்பை: குரூப் 1 ல் நிலவும் கடும் போட்டி - அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

டி20 உலகக் கோப்பை: குரூப் 1 ல் நிலவும் கடும் போட்டி - அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?
டி20 உலகக் கோப்பை: குரூப் 1 ல் நிலவும் கடும் போட்டி - அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

'குரூப் 1' பிரிவில் அரை இறுதி சுற்றுக்கு செல்வதற்கான போட்டி கடுமையாகியுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 'சூப்பர் 12' சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க, 'குரூப் 1' பிரிவில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்து அணிகளும் தலா 4 போட்டிகளை விளையாடிவிட்டன. இன்னும் 1 போட்டி மட்டுமே இந்த அணிகளுக்கு மீதமுள்ளன. சூப்பர் 12 சுற்றில் 'குரூப் 1' மற்றும் 'குரூப் 2' ஆகிய இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். இன்னும் எந்த அணியும் அரை இறுதியில் தனது இடத்தை உறுதி செய்யவில்லை. இதனால் இந்த அணிகள் விளையாடப்போகும் கடைசி போட்டியில் என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பும் நிலவுகிறது. அந்த பரபரப்பையும், அடுத்து என்ன நடக்கும் என்பதையும் இக்கட்டுரையில் அலசுவோம்!

நியூசிலாந்து:

நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், இந்த தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது நியூசிலாந்து. இருப்பினும் அந்த அணி நல்ல ரன் ரேட் வைத்திருப்பதால் புள்ளிப்பட்டியலில் 5 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அரையிறுதி இடத்தை ஓரளவுக்கு உறுதி செய்து வைத்துள்ள நியூசிலாந்து அணி, வரும் 4ம் தேதி நடக்கும் போட்டியில் அயர்லாந்தை வென்றால் 7 புள்ளிகள் பெற்று, அதிக ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தை பெற்று, மற்ற அணிகளின் முடிவை நம்பியிருக்கமால் அரையிறுதிக்கு கம்பீரமாக செல்லலாம்.

இங்கிலாந்து:

நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளது இங்கிலாந்து.  5 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கும் அந்த அணி வரும் 5ம் தேதி நடக்கும் போட்டியில் இலங்கையை வென்றால் அதிக ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி அரையிறுதிக்கு செல்லலாம். மாறாக இலங்கையிடம் தோற்றால், அதேநேரம் வரும் 4ம் தேதி நடக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா வென்றால் இங்கிலாந்து வெளியேற வேண்டியதுதான் ஒரே வழி.

ஆஸ்திரேலியா:

ஒரு தோல்வி, இரண்டு வெற்றி, ஒரு ஆட்டத்தில் முடிவில்லை என ரிசல்ட்டைப் பெற்றிருக்கும் ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தன்னுடைய கடைசிப் போட்டியில் பெரிய வெற்றியை பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஆஸ்திரேலியா. ஆனால் அது நடந்தால் மட்டும் போதாது. மற்றொரு போட்டியில் இலங்கை அணியிடம் இங்கிலாந்து தோற்றால் மட்டுமே ஆஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு செல்லும். ஆனால் இதில் பெரும்பாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முடிவுகள் வர வாய்ப்புள்ளதால் சொந்த மண்ணில் அரை இறுதிக்கு கூட செல்ல இயலாத சூழல் அந்த அணிக்கு உருவாகியுள்ளது.

இலங்கை:

2 தோல்வி, 2 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில்  உள்ளது இலங்கை. 'குரூப் 1'இல் எல்லா அணிகளுக்கும் மழையால் குறைந்தது ஒரு புள்ளியாவது கிடைத்துள்ளது. ஆனால் இலங்கைக்கு அது கிடைக்கவில்லை. இதனால் கடைசி போட்டியில் இங்கிலாந்தை வெற்றி பெற்றாலுமே அரையிறுதி செல்ல வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. ஒருவேளை இலங்கை அணி, இங்கிலாந்து உடனான போட்டியில் வென்று, நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக்கில் தோற்றால், இலங்கை அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது.

அயர்லாந்து:

நான்கு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றி மட்டுமே அயர்லாந்துக்கு கிடைத்துள்ளது. இதனால் அயர்லாந்தின் அரையிறுதி கனவு கிட்டத்தட்ட தகர்ந்துவிட்டது. அதுவும் கடைசிப் போட்டியில் பலம் வாய்ந்த நியூஸிலாந்தை பெரிய வித்தியாசத்தில் வீழ்த்தினாலும், மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வாய்ப்பில்லை.

ஆப்கானிஸ்தான்:

4 போட்டிகளில் இரண்டு போட்டிகள் மழையால் ரத்து; நடைபெற்ற 2 போட்டிகளிலும் தோல்விதான். என்ன செய்தாலும் ஆப்கானிஸ்தான் அணியால் அரையிறுதி பற்றி நினைக்க முடியாத நிலைமைதான் உள்ளது.

இதுதான் நடக்கும் என சில விஷயங்கள் தெரிந்தாலும்கூட, அடுத்த நிமிஷம் நடக்கபோகும் அதிசயம் தானே வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்?! அந்த சுவாரஸ்யத்தை, பொறுத்திருந்து பார்ப்போமே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com