பாரா ஆசிய விளையாட்டு| ஒரே நாளில் ஒரு தங்கம், 2 வெள்ளி அடித்த துளசிமதி! இந்தியாவுக்கு 114 பதக்கங்கள்!
பாரா ஆசிய விளையாட்டில் தமிழக வீராங்கனை துளசிமதி ஒரு தங்கம், 2 வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தி அசத்தினார். இந்தியா 114 பதக்கங்களுடன் 4வது இடத்தில் முடித்தது, இது முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டின் 5வது சீசன் ஜப்பானில் உள்ள நாகோயோவில் அக்டோபர் 18 முதல் 24ஆம் தேதியான இன்றுவரை நடைபெற்றது. இந்தியா சார்பில் 168 பேர் பங்கேற்ற நிலையில், 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கல பதக்கங்களுடன் இந்திய வீரர்-வீராங்கனைகள் பதக்க வேட்டை நடத்தினர்.
இந்தியாவின் போட்டிகள் முடிந்துவிட்ட நிலையில், தற்போது 114 பதக்கங்களுடன் 4வது இடத்தில் முடித்துள்ளது இந்தியா. 114 என்பது இந்தியாவின் முந்தைய பதிப்பில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட ஆறு பதக்கங்கள் அதிகம். இறுதிப் பதக்கப் பட்டியலில் தென் கொரியாவை இந்தியா முந்தும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவே இந்தியாவின் மிகச் சிறந்த பதக்க எண்ணிக்கையாகும்.
நடப்பு சீசனில் பங்கேற்ற தமிழகத்தைச்சேர்ந்த பாட்மிண்டன் வீராங்கனை துளசிமதி, ஒரு தங்கம், 2 வெள்ளி என 3 பதக்கம் வென்று அசத்தினார். பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றதோடு, பெண்கள் ஒற்றையர் பிரிவு, கலப்பு இரட்டையர் பிரிவு இரண்டிலும் வெள்ளிவென்று அசத்தினார். பிரதமர் மோடி துளசிமதிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், தமிழக முதல்வர் 1.25 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

