ஆசிய பாரா விளையாட்டு| 3 முறை தவறாக இசைக்கப்பட்ட தேசிய கீதம்.. மன்னிப்பு கோரிய மேயர்!
ஆசிய பாரா விளையாட்டில் 3 முறை தேசிய கீதம் தவறாக இசைக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. தைவான் மற்றும் மங்கோலிய வீரர்களுக்காக ஈரானிய தேசிய கீதம் தவறாக இசைக்கப்பட்டதை நகோயா மேயர் மன்னிப்பு கேட்டார். இதுபோன்ற தவறுகள் மீண்டும் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி தொடங்கிய ஐச்சி-நகோயா ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடந்துவருகிறது. கடைசி நாளான இன்றுடன் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி மற்றும் 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்களுடன் இப்போட்டியை நிறைவு செய்தது. இது இந்தியாவின் முந்தைய பதிப்பில் பெற்ற பதக்கங்களின் எண்ணிக்கையை விட ஆறு பதக்கங்கள் அதிகம். தற்போதைக்கு இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது, ஆனால் இறுதிப் பதக்கப் பட்டியலில் தென் கொரியாவிடம் முந்த வாய்ப்புள்ளது. இருப்பினும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இதுவே இந்தியாவின் மிகச் சிறந்த பதக்க எண்ணிக்கையாகும்.
இந்தசூழலில் தான் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 3 முறை தேசிய கீதம் தவறாக இசைக்கப்பட்டது சர்ச்சையாகியுள்ளது. தைவான் மற்றும் மங்கோலியாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்காக தவறாக ஈரானிய தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, நகோயா மேயர் வெளிப்படையாக மன்னிப்புக் கோரினார்.
ஏற்கனவே இரண்டு முறை தவறாக இசைக்கப்பட்டதற்கு பிறகு ஆய்வு நடத்தி சரிசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 3வது முறையாக தவறாக இசைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தசூழலில் இதற்கு மன்னிப்பு கோரிய நகோயா மேயர், "ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. எனவே, அதிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் செயல்பாடுகள் மறுஆய்வு செய்யப்பட்டு ஆராயப்பட்டன. இது மீண்டும் நடந்திருப்பது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று மேயர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

