‘பாத்திரம் கழுவிய பாகி. வீரர்கள்; AUSவில் ஏற்பட்ட அசிங்கம்’ - உண்மையை உடைத்த கேப்டன்!
ஆஸ்திரேலியாவில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து பாகிஸ்தான் அணியின் ஹாக்கி கேப்டன் விவரித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாகிஸ்தான் தேசிய அணி வீரர்கள் தங்குவதற்கு இடமில்லாமல் ஆஸ்திரேலியத் தெருக்களில் அலைய வேண்டிய அவல நிலை குறித்து அவர் விவரித்துள்ளார்.
பாகிஸ்தான் விளையாட்டுக்குச் சோதனைக் காலம் என்று சொன்னால் அது மிகையாகாது. ஏற்கெனவே இரு நாட்டு கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்குவதில்லை. இதனால் அவமானப்படுத்த அவர்கள், இந்த விவகாரத்தை ஐசிசி வரை கொண்டு சென்றனர். இந்த நிலையில், பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் அவமானப்படுத்தப்பட்டது பேசுபொருளாகியிருக்கிறது. FIH ஹாக்கி புரோ லீக்கின் இரண்டாவது லெக்கிற்காக பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா சென்றிருந்தது. சிட்னியில், அவர்கள் தங்குவதற்கு பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு (PHF) ஹோட்டல் கட்டணங்களை செலுத்தாததால் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் வீரர்கள் சரியான தங்குமிடம் இல்லாமல் தவித்தனர். தவிர, அவர்கள் தங்களின் உடைமைகளுடன் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இறுதியில், அந்த அணி உள்ளூர் வசதியில் தங்குமிடத்தைக் கண்டுபிடித்தது. ஆனால் போட்டி நாட்களில்கூட, அவர்களே தங்களது பாத்திரங்களைக் கழுவ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். மேலும் தங்களது துணிகளை துவைக்க வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளாகினர்.
இதன் காரணமாக, நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்த பாகிஸ்தான், நாடு திரும்பியது. அதற்குள் இந்த விவகாரம் இந்தியாவின் காதுகளுக்கு எட்டியது. இதையடுத்து, தங்களது நாடும் அணியும் அவமானப்படுத்தப்பட்டதாகக் கருதி, ஹாக்கி அணியின் கேப்டனான அம்மாத் ஷகீல் பட், அப்படியெல்லாம் நடக்கவில்லை என உண்மையை மறைத்து பொய்யாகப் பேட்டியளித்தார். ஆனால், அந்தப் பேட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களின் பரிதாப நிலை வீடியோவாக வெளியாகி வைரலானது.
இதற்கிடையே தோல்வியுற்ற பாகிஸ்தான் அணி, தாயகம் திரும்பியது. ஆனால் அதை வரவேற்க எந்த அதிகாரிகளும் விமான நிலையம் செல்லவில்லை. இதைத் தொடர்ந்து, விமான நிலையத்திலேயே பாகிஸ்தான் ஹாக்கி வாரியத்தை வெளுத்து வாங்கினார் கேப்டன் ஷகீல் பட். அவர், “எங்களுக்கு அணி நிர்வாகம் ஹோட்டலை ஏற்பாடு செய்து தரவில்லை. அதனால் அனாதையாக 10-12 மணி நேரம் சுற்றித் திரிந்தோம். சரியான நேரத்தில் உணவும் வழங்கப்படவில்லை. வீரர்களே உணவைத் தயார் செய்துகொண்டனர். இரண்டு முதல் மூன்று மணி நேரம் பாத்திரங்களைக் கழுவினார்கள். படுக்கையறைகள் மற்றும் கழிப்பறைகளை அவர்களே சுத்தம் செய்தார்கள். எங்களுக்கு சரியான ஓய்வு நேரம் இல்லை. வீரர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தானுக்காக நாங்கள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட முடியும்? இது, விளையாட்டு வாரியத்தின் தவறா அல்லது பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பின் தவறா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். எங்கள் அணி நிர்வாகம் எங்களிடம் பலமுறை பொய் சொல்லியுள்ளது. முன்னதாக, எனது நாட்டை அவதூறு செய்யக்கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். அதற்காக இங்கு (ஆஸி.) எல்லாம் நன்றாக இருக்கிறது என்றும், அணிக்கு எந்த அநீதியும் நடக்கவில்லை என்றும் கூறி ஒரு வீடியோவை வெளியிட்டேன். ஆனால் அது உண்மையல்ல. ஆனால் எங்கள் அணி குறித்து ஆஸ்திரேலியாவில் வெளிவந்த செய்திகள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தும் உண்மையே” எனத் தெரிவித்துள்ளார்.

