\
shoaib akhtar criticism and mohsin naqvi leaves mid match after pakistans crushing
மொக்சின் நக்வி, சோயிப் அக்தர்எக்ஸ் தளம்

பாகி. பரிதாப தோல்வி.. பாதியிலேயே நடையைக் கட்டிய வாரியத் தலைவர்.. சாடிய சோயிப் அக்தர்!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்த நிலையில், அப்போட்டியைப் பார்த்த பாகி. கிரிக்கெட் வாரியத் தலைவர் பாதியிலேயே எழுந்து சென்றார்.
Published on

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்த நிலையில், அப்போட்டியைப் பார்த்த பாகி. கிரிக்கெட் வாரியத் தலைவர் பாதியிலேயே எழுந்து சென்றார். மறுபுறம், அவ்வணியின் தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத் தலைவர் மொக்சின் நக்வியையும் மூத்த வீரர்களையும் முன்னாள் பந்துவீச்சாளரான சோயிப் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில், இந்திய அணி அசத்தல் வெற்றிபெற்று சூப்பர் 8 பிரிவுக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி, 175 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல், 18 ஓவர்களில் 114 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியைத் தழுவியது. முன்னதாக, கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொக்சின் நக்வி கண்டுகளித்தார். ஆனால், அவ்வணியின் பேட்டிங்கின்போது தோல்வி உறுதியானதும், போட்டியை முழுமையாகப் பார்க்காமல் அவர் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டார். பாகிஸ்தான் அணியின் ரன்ரேட் குறைந்து, தோல்வி தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த நக்வி, அந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.

shoaib akhtar criticism and mohsin naqvi leaves mid match after pakistans crushing
மொஹ்சின் நக்விAP

இன்னொரு புறம, பாகிஸ்தான் படுதோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாகச் சாடியுள்ளார்.

நேரலைத் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொக்சின் நக்வி மற்றும் அணியின் மூத்த வீரர்களைக் கடுமையாக விமர்சித்தார். அதில் அவர், “பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான் போன்ற மூத்த வீரர்கள் முக்கியமான போட்டிகளில் தொடர்ந்து சொதப்புகிறார்கள். ஆனாலும், அவர்களுக்கு ஏன் தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படுகிறது? இவர்களை நீங்கள் பெரிய நட்சத்திரங்களாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனால் இவர்களால் ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை. வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன பயன்” என கேள்வி எழுப்பிய அவர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொக்சின் நக்வியையும் நேரடியாகத் தாக்கினார்.

shoaib akhtar criticism and mohsin naqvi leaves mid match after pakistans crushing
சோயிப் அக்தர்எக்ஸ் தளம்

“அவருக்கு கிரிக்கெட் வாரியத்தை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை. உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்ன தெரியுமா? தகுதி இல்லாத ஒருவரிடம் மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான். திறமை இல்லாத ஒருவரிடம் பதவியைக் கொடுத்தால், அவர் அந்த அமைப்பையே அழித்துவிடுவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்குத் தான் வகிக்கும் பதவியின் முக்கியத்துவமே தெரியவில்லை. தகுதியற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தால் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com