2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, பல்வேறு பிரிவுகளில் பதக்கத்திற்காக போராடிவருகிறது.
இதுவரை துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவும், வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் விளையாடவிருக்கின்றன. இன்றைய நாளில் இந்தியாவின் பதக்கத்தின் எண்ணிக்கை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் அமன் ஷெராவத் வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
காலிறுதிப்போட்டியில் ஜெலிம்கான் அபகாரோவை எதிர்த்து விளையாடவிருக்கிறார். காலிறுதிப்போட்டியானது இன்னும் சற்றுநேரத்தில் நடைபெறவிருக்கிறது. மகளிருக்கான 57கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 16வது சுற்றில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.