முதலாவது மகள்ரி பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லேனிங் 35 ரன்களும், ஷிகா பாண்டே மற்றும் ராதா யாதவ் ஆகிய இருவரும் தலா 27 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரின் 3வது பந்தில் 134 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய நட் ஸ்கிவர்-பிரண்ட் 60 ரன் எடுத்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் முதலாவது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியிருக்கிறது.
லீக் முதல் ஃபைனல் வரை .. நடந்தது என்ன?
முதலாவது பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில், இந்திய அணியின் மகளிர் கேப்டன் ஹர்மன் ப்ரித் ஹவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மேக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ், ஆஸ்திரேலிய வீராங்கனை அலிஷா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்ஸ், இந்திய மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஆஸ்திரேலிய வீராங்கனை பேத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயண்ட்ஸ் என 5 அணிகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகளில் விளையாடினர்.
இதில் லீக் சுற்று முடிவில் டாப்-3 (டெல்லி, மும்பை, உ.பி.) இடங்களைப் பிடித்த அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறின. பிளே ஆப் சுற்றின் முடிவுப்படி, டெல்லி அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 2வது இடத்தில் மும்பையும், 3வது இடத்தில் உ.பி. வாரியர்ஸும் இடம்பிடித்தன. இதையடுத்து, இறுதிச் சுற்றுக்கு 2வது அணியாக முன்னேறுவதற்கு இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்றதில் உ.பி. வீழ்த்தி மும்பை தகுதி பெற்றது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த டெல்லி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்!